ஒரே உடலில் நூறாவதாரம் காட்டிய நுண்மாண் நுழைபுலக் கலைஞர்; தமிழ்நாட்டுக் கலைவெளியில் வந்துபோன கந்தர்வன்: சிவாஜி கணேசனின் 97 பிறந்த நாளை ஒட்டி வைரமுத்து வாழ்த்து

3 months ago 18

சென்னை: ஒரே உடலில் நூறாவதாரம் காட்டிய நுண்மாண் நுழைபுலக் கலைஞர் என சிவாஜி கணேசனின் 97 பிறந்த நாளை ஒட்டி வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் 1.10.1927 ஆம் ஆண்டு பிறந்தார். குழந்தைப் பருவம் முதற்கொண்டே நடிப்பதில் ஆர்வம் கொண்டு பல்வேறு நாடகங்களில் பங்கேற்று நடித்து வந்தவர் சிவாஜி. சிவாஜி கணேசன் பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகி 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 2 இந்தி படங்கள், 9 தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். “நடிகர் திலகம்”, “நடிப்புச் சக்கரவர்த்தி” என்று மக்களாலும், திரை உலகத்தினராலும் அழைக்கப்பட்டார். சிவாஜி கணேசன் நடிப்பு திறமையை பாராட்டி பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, செவாலியே விருது மற்றும் தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி திரை பிரபலங்கள் பலரும் அவருடனான தங்களது அனுபவங்கள் மற்றும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சிவாஜி கணேசனின் பிறந்த நாளை ஒட்டி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளபதிவில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழ்நாட்டுக் கலைவெளியில்
வந்துபோன கந்தர்வன் சிவாஜி

அரைநூற்றாண்டாய்த்
தமிழர்களின்
சாயங்கால சந்தோஷம்

தமிழர்களின்
பண்பாட்டுப் படிமங்களை
உடலென்ற ஊடகத்தில்
ஏற்றிக் காட்டியவர்

ஒரே உடலில்
நூறாவதாரம் காட்டிய
நுண்மாண் நுழைபுலக் கலைஞர்

களிறு பிளிறும்
தமிழ்க் குரலைத்
தொண்டையில் இருத்தித்
தொண்டு செய்தவர்

ஆனால்,
வட்ட நிலாவை
ஆதிக்க மேகங்கள்
அங்குலம் அங்குலமாய்
மறைப்பதுபோல
சிவாஜி மெல்ல மெல்ல
மறக்கப்படுகிறார்

கூடாது

அடுத்தடுத்த
தலைமுறைகளுக்கும்
அவர் கடத்தப்பட வேண்டும்;
ஊடகங்கள்
உயர்த்திப் பிடிக்க வேண்டும்

அவர்
சொல்லித்தந்த தமிழைப்
பிறக்கும் பிள்ளைகளும்
பேசவேண்டும்

அவரை நான்
மறக்க மாட்டேன்

விண்மீன்கள் கண்ணுறங்கும்
அர்த்த ராத்திரியில்
இரவின் நிசப்தத்தில்
ஒரேஒரு கைதட்டல் மட்டும்
கேட்கிறது என்றால்
வைரமுத்து சிவாஜி படம்
பார்த்துக்கொண்டிருக்கிறான்
என்று உலகம் உணர்வதாகுக இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post ஒரே உடலில் நூறாவதாரம் காட்டிய நுண்மாண் நுழைபுலக் கலைஞர்; தமிழ்நாட்டுக் கலைவெளியில் வந்துபோன கந்தர்வன்: சிவாஜி கணேசனின் 97 பிறந்த நாளை ஒட்டி வைரமுத்து வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article