டெல்லி : பார்வைக் குறைபாடு /குறைவான பார்வை உள்ளவர்களும் நீதிபதி பணிக்கான தேர்வில் பங்கேற்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மத்திய பிரதேசத்தில், மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வில் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பதற்கு முழுமையாக தடை விதிக்கும் வகையில், கடந்த ஆண்டு விதிகள் திருத்தப்பட்டன. இதனை எதிர்த்து அம்மாநில பார்வை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்துக்கு கடிதம் எழுதப்பட்டது. இந்த கடிதத்தை பரிசீலித்த உச்சநீதிமன்றம், அதனை பொது நல மனுவாக ஏற்றுகொண்டது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு, ஒன்றிய மற்றும் மத்திய பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதித் துறையில் மாற்று திறனாளிகளை பணியமர்த்த எந்த சட்டமும் தடையாக இருக்க முடியாது என்று நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. மாற்றுத்திறனாளிகள் நீதித்துறையில் பணியாற்றுவதற்கு தடையாக இருந்த சட்ட விதிமுறைகள் ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்குவதற்கு தேவையான கட்டமைப்பை வழங்க அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மறைமுக பாகுபாடுகள் காட்டக்கூடாது என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் மற்றும் அரசியல் சாசன பிரிவுகளை தீவிரமாக ஆராய்ந்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் நீதிபதிகள் கருத்து கூறினர்.
The post ஒருவர் நீதித்துறை பணியில் சேர உடல் இயலாமை மட்டும் தடையாக இருக்கக் கூடாது : உச்ச நீதிமன்றம் முத்திரைத் தீர்ப்பு appeared first on Dinakaran.