சென்னை: ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் ஆளுநரை, ஒன்றிய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ்த்தாய் வாழ்த்தை நடைமுறைப்படுத்திய போது, குறிப்பிட்ட பிரிவினரின் மனம் புண்படாத வண்ணம் சில வரிகளை நீக்கினார்.
ஆனால் இன்றைக்கு, ஆளுநர் பங்கேற்போடு நடைபெற்ற ‘டிடி தமிழ்’ இந்திக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், தமிழ்நாடே கொதித்தெழும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து ‘திராவிட நல்திருநாடு’ எனும் வரியை நீக்கியிருக்கிறார்கள். யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம்.
இதற்கு மேலும் ஓர் உதாரணமே இச்சம்பவம்! சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது. இதைப் புரிந்து கொள்ளாத ஆரியநர், அண்ணா வழியில் நடைபோடும் நம் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, ‘கண்ணியம்’ குறித்துப் பாடமெடுக்கத் தேவையில்லை. ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்.
The post ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.