![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38808962-hitman.webp)
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
இதில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49.5 ஓவர்களில் 304 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 308 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 7 சிக்சர்கள் உள்பட 119 ரன்கள் குவித்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் 32-வது சதமாக பதிவானது.
இந்நிலையில் ரோகித் சர்மா அகமதாபாத் நகரில் நடைபெறும் அடுத்த போட்டியிலேயே (இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டி) தன்னுடைய 33-வது ஒருநாள் சதத்தை அடிப்பார் என்று இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கணித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "69 மீட்டரில் ரோகித் சர்மா அடித்த முதல் சிக்சர் இன்னும் சிறப்பான வர்ணனைக்கு தகுதியானது. இருப்பினும் என்னுடைய குரல் கொஞ்சம் அந்த நேரத்தில் மந்தமாக இருந்தது. நேராக அவர் அடித்த அனைத்து ஷாட்டுகளையும் பாருங்கள். அவர் ஸ்பின்னர்களுக்கு எதிராக தன்னுடைய புட் வொர்க்கை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினார். ஒவ்வொரு பவுண்டரி மற்றும் சிக்சருக்கு பின் குறைவான டாட் பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ரோகித் ஸ்ட்ரைக்கை மாற்றுவதில் கவனம் செலுத்தினார்.
ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இது ரோகித் சர்மாவுக்கான நாள் என்று நான் சொன்னேன். ஏனெனில் கட்டாக் மைதானத்தில் அவருடைய பீல்டிங் மிகவும் கூர்மையாக இருந்தது. அப்படித்தான் பெரிய வீரர்கள் செயல்படுவார்கள். இன்று இந்தியா தொடரை வென்று விட்டது. ஆனால் அவர்கள் அகமதாபாத் நகரிலும் வெற்றி பெறாமல் விட மாட்டார்கள். அங்கே ரோகித் சர்மாவின் 33-வது சதம் இருக்கிறது என்று உங்களுக்கு நான் சொல்கிறேன்" என கூறினார்.