
மவுண்ட் மவுங்கானுய்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் இரு ஆட்டங்களில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. மழை காரணமாக இந்த ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 42 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 264 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மைக்கேல் பிரேஸ்வெல் 59 ரன் எடுத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் ஆகிப் ஜாவெத் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 265 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் 40 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 221 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 43 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் பென் சியர்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முழுமையாக கைப்பற்றி அசத்தியது.