அகமதாபாத்: ஒருதலைக் காதல் விவகாரத்தால் 12 மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண் இன்ஜினியரை நீண்ட நாட்களுக்கு பின் குஜராத் போலீஸ் அதிரடியாக கைது செய்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் மற்றும் 12 மாநிலங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் போன்ற 21 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன. இது நாடு முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியதுடன், பல்வேறு மாநில காவல்துறையினரும் இணைந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
மர்ம நபர்கள், தங்களது அடையாளத்தை மறைக்கப் போலி மின்னஞ்சல் முகவரிகள், விபிஎன் மற்றும் டார்க் வெப் போன்றவற்றைப் பயன்படுத்தியிருந்தனர். இந்தத் தொடர் மிரட்டல்களுக்குப் பின்னணியில் இருந்தது சென்னையைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் ரெனி ஜோஷில்டா என்ற பெண் அதிகாரி என்பது தற்போது தெரியவந்துள்ளது. தான் ஒருதலையாகக் காதலித்த திவிஜ் பிரபாகர் என்பவர், வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ததால், அவரைப் பழிவாங்கும் நோக்கில், அவரது பெயரிலேயே போலி மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கி இந்த மிரட்டல்களை விடுத்துள்ளார். ரோபோட்டிக்ஸ் படித்த பொறியாளரான இவர், தனது தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார். நீண்ட தொழில்நுட்பக் கண்காணிப்புக்குப் பிறகு, அகமதாபாத் சைபர் கிரைம் போலீசார் அவரைச் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post ஒருதலைக் காதலால் விபரீதம்; 12 மாநிலங்களுக்கு 21 வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னை பெண் இன்ஜினியர் கைது: குஜராத் போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.