ஒரு மில்லியன் டாலர் பரிசு

4 months ago 13

சிந்து சமவெளி நாகரிம் கண்டுபிடிக்கப்பட்டது இந்திய வரலாற்றையே மாற்றிப் போட்டது. 1924ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்து அறிவித்தார் ஜான் மார்ஷல். சுமேரிய நாகரிகத்தோடு இருந்த சில ஒற்றுமைகள் காரணமாக, இதன் காலகட்டம் சுமார் 4,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று முடிவானது. சிந்து சமவெளி (ஹரப்பா) நாகரிகத்தின் அழிவிற்கு சில நூற்றாண்டுகளுக்குப் பிறகே, ஆரியர் வருகை நிகழ்ந்தது என்கிறார் பிரபல வரலாற்று ஆய்வாளர் தேவ்தத் பட்நாயக்.

சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் டிஎன்ஏ ஆதாரங்களின்படி, 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கங்கை நதி சமவெளியிலிருந்து தென்பகுதி வரை பரவி வாழ்ந்தனர். இவர்களில் சிலர் தொல் திராவிட மொழியைப் பேசியிருக்கலாம். ராக்கிடி என்ற பகுதியில் சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த பெண்ணின் உடலில் இருந்து கிடைத்த டிஎன்ஏ, தமிழ்நாட்டின் இருளர் பழங்குடியைச் சேர்ந்தவர்களின் டிஎன்ஏவுடன் ஒத்துப் போகிறது. இதிலிருந்து தொல் திராவிடகுடியும் சிந்துவெளி மக்களும் இணைந்து வாழ்ந்ததை உணர முடிகிறது.

சிந்துவெளி நாகரிகம் ஆரியத்துக்கு முற்பட்டது, அங்கு பேசப்பட்டது திராவிட மொழியாக இருக்கலாம் என்று ஜான் மார்ஷல் நூறாண்டுகளுக்கு முன்பு சொன்ன குரல் இன்றைக்கு வலுப்பெற்றிருக்கிறது. சிந்துவெளி பற்றி ஜான் மார்ஷல் தன் கண்டுபிடிப்பை வெளியிட்டதும், பெரியார் தன் விடுதலை நாளிதழில் அதை பற்றி கட்டுரைகள் வெளியிட்டிருந்தார். அண்ணாவும் 1948ம் ஆண்டிலேயே சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்களை வெளிக்கொணர்ந்த சர் ஜான் மார்ஷல் சாதனைகளை பாராட்டி எழுதியிருக்கிறார்.

கடந்த 2010ம் ஆண்டு கோவை தமிழ் செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய கலைஞர் செம்மொழி மாநாட்டு இலச்சினையில், குமரி வள்ளுவர் சிலை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் வரியுடன் சேர்த்து, சிந்துவெளி முத்திரையையும் பதிவிட்டார்.  சிவகளை ஆய்வு மூலம் ‘தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அறிவியல் வழிப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிந்துவெளி நாகரிக ஆய்வின் மிகவும் முக்கிய பகுதி, அங்கு கிடைத்த எழுத்துகள்தான். இவை எதனைக் குறிக்கின்றன என்ற விவாதம் நீண்ட நாட்களாக நடந்து வருகின்றன. சிந்து சமவௌியில் மொத்தம் 400 முதல் 600 தனித்துவமிக்க எழுத்து வடிவங்கள் இருந்தாலும், சுமார் 50 எழுத்துகளே திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, ஒரு வரியில் ஐந்து முதல் 20 வார்த்தைகளே இருக்கின்றன. இந்த எழுத்துகளோ, சின்னங்களோ விருப்பப்படி பதிக்கப்படவில்லை. அவற்றில் ஒரு இலக்கண ஒழுங்கு இருந்தது.

செழித்து வளர்ந்த சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை இன்னும் நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை. நூறு ஆண்டுகளை கடந்தும் தீர்க்கப்படாத இந்த சிந்துவெளி புதிரை அறிய உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் தமிழ் அறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் உட்பட பலரும் இன்றளவும் பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

சிந்துவெளி எழுத்துக்களை தெளிவாக புரிந்து கொள்ளும் வழிவகையை கண்டறியும் நபர்கள் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.8.5 கோடி) பரிசாக வழங்கப்படும் என சென்னையில் நடந்த சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த புதிருக்கான விடை கண்டறியப்படும் போதுஇந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை தமிழை தவிர்த்துவிட்டு இனி எழுத முடியாது என்ற முதல்வரின் குரலை நாமும் உரக்க சொல்வோம்.

The post ஒரு மில்லியன் டாலர் பரிசு appeared first on Dinakaran.

Read Entire Article