திருவண்ணாமலை மாவட்டம் பெரிய இளவந்தாங்கல் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் கார்த்திக். அந்தப் பகுதியில் விவசாயம்தான் பிரதானம். இருந்தாலும் விக்னேஷ்க்கு கால்நடை வளர்ப்பில்தான் அதிக ஆர்வம். இதனால் இவரது பண்ணையில் ஆடு, மாடு, கோழி, வாத்து, மீன்கள் என பலவகையான கால்நடைகள் வளர்த்து அதனை விற்பனை செய்து லாபமும் ஈட்டி வருகிறார். அவரைப் பற்றியும் அவரது பண்ணையைப் பற்றியும் தெரிந்துகொள்ள நேரடியாக அவரது பண்ணைக்கே சென்றோம். எங்களை கண்டதும் வரவேற்ற விக்னேஷ் பேசத் தொடங்கினார். வந்தவாசியை பொருத்தவரையில் தலச்சேரி, போயர், வடமாநில ரக வகை பார்பாரி ஆடுகளை அதிகம் வளர்ப்பார்கள். ஆனால் நான் தென்தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஆடு வகையான கொடி ஆடுகளை வளர்த்துவருகிறேன் என மேலும் தொடர்ந்தார் விக்னேஷ்.கொடி ஆடுகள் குறிப்பாக கோவில்பட்டி, தூத்துக்குடி, இராமநாதபுரம் பகுதிகளில் அதிகமாக இருக்கும். வந்தவாசி பகுதி அதிகம் நீர் வரத்து இல்லாத பகுதி. இந்த ஆடுகளை நான் வளர்க்க தேர்வு செய்ததற்கு காரணமும் இதுதான். எந்த வெயில் மழையாக இருந்தாலும் தண்ணீர் குறைவாக கொடுத்தாலும்கூட கொடிஆடுகள் நன்றாக வளரும். கொடி ஆடுகள் பச்சைப் புற்கள் மட்டும் இல்லாமல் உலர் தீவனம், மேய்ச்சலில் சோர்வு இல்லாமல் மேயும் பக்குவம் கொண்டவை.
கொடி ஆடுகளை தவிர மற்ற ஆடுகள் அனைத்தும் உலர் தீவனம் கொடுத்தால் மட்டுமே அதிகம் எடை கொடுக்கும். இல்லையென்றால் சூப்பர் நேப்பியர், பசுந்தாள் போன்ற தீவனத்தை கொடுத்தால் மட்டுமே சாப்பிடும். மேய்ச்சலிலும் தீவனம் எடுக்காது. ஆனால் கொடி ஆடுகள் இதில் மாறுபட்டு இருப்பதால் வளர்ப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது. மேய்ச்சலிலேயே தீவனம் எடுத்து கொள்ளும். மேய்ச்சலுக்கு முன்பு பசுந்தீவனம் கொடுப்பேன். உலர்தீவனம் கொடுப்பது கிடையாது. இதனால் எனக்குப் பெரிய செலவு இருப்பதில்லை. நான் என்னுடைய ஆட்டுக் கொட்டகையில் பரண் அமைக்கவில்லை. சாதாரண நிலத்திலேயே ஆடுகளை வளர்த்து வருகிறேன். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை கொட்டகையை சுத்தம் செய்து விட்டு கிழிஞ்சல் சுண்ணாம்பு மற்றும் மஞ்சள் தூவிவிடுவோம். இது பாக்டீரியாக்களை முழுவதுமாக அழித்துவிடும் என்பதால் ஆடுகளின் மீது ஒட்டுண்ணிகளும் வருவது கிடையாது. ஆடுகளை கோமாரிநோய் அதிகம் தாக்கும். இதனை கட்டுப்படுத்த பன்றி நெய்யை வாயில் தடவிவிடுவோம். இதன்மூலம் ஆடுகள் நோய் நொடி இல்லாமல் வளர்கின்றன.
ஓங்கோல், கிர் மாடும் வளர்த்துவருகிறேன். இது நாட்டு மாடு. இதனுடைய சாணம், கோமியத்தையும் வயலுக்கு உரமாக பயன்படுத்துகிறேன். ஜீவாமிர் தமும் என்னுடைய மாட்டின் கழிவில் இருந்துதான் தயாரிக்கிறேன்.இதேபோல் குட்டையில் விரால் மீன் வளர்த்து வருகிறேன். முதலில் சாதாரணமாக குட்டையாகத்தான் அமைத்தேன். வெயில் காலங்களில் அதிகம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த குட்டையில் 500 மைக்ரான் தார் பாலின் போட்டேன். குட்டையில் இருக்கும் தண்ணீரை தீவனப்பயிர்களுக்கும் பாய்ச்சுகிறேன். இதனால், பயிர்களுக்கு நல்ல ஊட்டமும் கிடைக்கிறது. மீன்களுக்கு பெரிய பராமரிப்பு கிடையாது. தீவனமாகவும் மாட்டுதீவனத்தை மட்டுமே போடுகிறேன்.இதுபோக, சிறுவடை நாட்டுக்கோழிகளையும் வளர்த்துவருகிறேன். கோழிமுட்டைகளை இன்குபெட்டரில் பொரிக்க வைக்கிறேன். அப்படி பொரிக்க வைத்த 100 கோழிக்குஞ்சுகள் தற்போது என்னிடம் உள்ளன. கோழிகளுக்கு நோய் வராமல் தடுக்க எஃப்1, லசோட்டா வேக்கிசினேசன் கொடுப்போம். கோழிகளை மாதம் வாரியாகக் கணக்கிட்டு ஒவ்வொரு கூண்டாக மாற்றிவிடுவோம். 60 க்கும் மேற்பட்ட பெட்டை கோழிகளை வளர்த்துவருகிறேன்.
இதன்மூலம் கிடைத்த முட்டைகளில் இருந்து கிடைத்ததுதான் 100 கோழிக்குஞ்சுகளும். இதோடு கின்னி கோழி, மனிலா வாத்து, பங்களாவாத்து உள்ளிட்டவற்றையும் வளர்த்து வருகிறேன். சிறுவடை கோழிகள், நாட்டு நாய், வாத்து, மீன் அனைத்தையும் நேரடியாக வந்து வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர். ஆர்டர் கேட்பவர்களுக்கும் பார்சல் மூலம் சிறுவடை கோழிக்குஞ்சுகளை அனுப்பிவைக்கிறேன்.ஒரு கோழிமுட்டையை ரூ.12 க்கு விற்பனை செய்கிறேன். மாதத்திற்கு 800 முட்டைகளை விற்பனை செய்வேன். இதன்மூலம் ரூ.9,600 கிடைக்கிறது. அதேபோல், மாதத்திற்கு 180 லிட்டர் பால் விற்பனை செய்கிறேன். ஒரு லிட்டர் பாலை ரூ.49 க்கு கொடுப்பதன் மூலம் மாதத்திற்கு எனக்கு ரூ.8,820 கிடைக் கிறது. ஒரு மாதமான கோழிக்குஞ்சுகளை ரூ.65க்கு விற்பனை செய்கிறேன். ஒரு மாதத்தில் 250 கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்கிறேன். இதன்மூலம் ரூ.16,250 கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு நான்கு ஆடுகள் விற்பனை செய்கிறேன். இதன்மூலம் ரூ.65,000 கிடைக்கிறது. பொங்கல், தீபாவளி, ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் கோழி, ஆடு, வாத்து, மீன் உள்ளிட்டவற்றை மொத்தமாக விற்பனை செய்துவிடுவேன். இதன்மூலம் ரூ.6 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதில் பெரிதாகச் செலவுகள் இல்லை. வருடத்திற்குப் பராமரிப்புச் செலவு, பண்ணையை சுத்தம் செய்யும் வேலையாட்கள் கூலி மட்டும் ரூ.1.5லட்சம் செலவாகும்” என்கிறார்.
தொடர்புக்கு:
விக்னேஷ் கார்த்தி- 98402 83274.
மீன் குட்டையில் இரவு நேரத்தில் ஒரு குண்டு பல்பு போட்டு வைத்துள்ளேன். இதன் வெளிச்சத்திற்கு வரும் பூச்சிகள் குட்டையில் விழுந்துவிடும். இந்த பூச்சிகளை மீன்கள் சாப்பிடுவதால் தேவையான புரோட்டின் மீன்களுக்கு கிடைக் கிறது. குட்டையை சுற்றி வலையை கட்டி வைத்துள்ளேன். இதை தாண்டி தவளைகள், பாம்பு போன்றவை குட்டைக்குள் போகாது.
The post ஒரு பங்கு செலவு… 6 மடங்கு வருமானம்…களைகட்டும் கால்நடை வளர்ப்பு… appeared first on Dinakaran.