ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம் என அனைத்து நூலகங்களும் டிசம்பர் மாதம் 2025ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் : அமைச்சர் சேகர்பாபு தகவல்

2 weeks ago 4

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (5.11.2024) திரு.வி.க. நகர் தொகுதி, எழும்பூர் தொகுதி, துறைமுகம் தொகுதி, ராயபுரம் தொகுதி, ஆர்.கே. நகர் தொகுதி மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளிலும் அமைந்துள்ள முழு நேரம் மற்றும் பகுதி நேர கிளை நூலகங்களை வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மேம்படுத்தி, பகிர்ந்த பணியிட மையம் (Co-working Space) மற்றும் கல்வி மையம் அமைப்பதற்காக களஆய்வினை மேற்கொண்டார்.

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது :மிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய ஆலோசனைப்படி கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி சென்னை தங்க சாலையிலே தமிழக முதல்வர் அவர்களால் திட்டமிடப்பட்டு ரூபாய் 4,224 கோடி அளவில் பல்வேறு திட்ட பணிகளை துவக்குகின்ற ஒரு விழா வடசென்னையில் அனைவராலும் பாராட்டப்படுகின்ற அளவிற்கு மிக நேர்த்தியாக நடந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை இணைத்து ரூபாய் 4,000 கோடி இருந்த நிலையில் ரூபாய் 5,776 கோடி செலவில் 225 திட்டங்கள் சுமார் 11 துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த திட்டங்களை குறித்து தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், துணை முதலமைச்சர் அவர்களும் தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இதில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் பங்களிப்பாக சுமார் ரூபாய் 1,613 கோடி இந்தத் திட்டப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களுடைய உத்தரவினை நிறைவேற்றி வருகின்றோம்.

இதில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 28 பணிகள் எடுக்கப்பட்டு 25 பணிகள் இப்பொழுது நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த திட்டத்திலும் அறிவிக்கப்படாத வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் கொளத்தூர் பகுதியில் நேற்றைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “முதல்வர் படைப்பகம்” என்ற உன்னதமான திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். வீட்டிலே படிக்கின்ற வசதி இல்லாத உயர்கல்வி படிப்பதற்காகவும், போட்டி தேர்வுகளில் பங்கேற்பதற்காகவும் முழுமையாக Wifi வசதியோடு மிகக் குறைந்த கட்டணத்தோடு, அதேபோல் பல்வேறு தேர்வுகளுக்கு படிக்கின்ற மாணவச் செல்வங்களுக்கு பொறியியல் படிப்பு என்றாலும் சரி அல்லது கலை மற்றும் அறிவியல் படிப்பு என்றாலும் சரி, வீட்டிலேயே படிக்கின்ற சூழல் சரிவர அமையப்பெறாத மாணவ செல்வங்களுக்கு அந்த இடங்களிலே படிப்பதற்கு இன்டர்நெட் வசதியோடு ஒரு பெரிய நூலகத்தையும் அமைத்து ஒரு முறை 51 பேர் உட்கார்ந்து படிக்கின்ற அளவிற்கும், 38 நபர்கள் பணி செய்வதற்குண்டான வசதிகளோடு நேற்றைக்கு தமிழக முதல்வர் அவர்கள் கொளத்தூர் தொகுதி மக்களுக்கு முதல் திட்டமாக அந்த திட்டத்தை அர்ப்பணித்தார்கள்.

அதை தொடர்ந்து இந்த ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் சென்னை பெருநகரத்திற்குட்பட்ட 10 இடங்களிலுள்ள நூலகங்களை மேம்படுத்துவதற்காக சுமார் ரூபாய் 20 கோடி செலவில், பகிர்ந்த பணியிட மையம் அமைப்பதற்கு ரூபாய் 30 கோடி செலவிற்கும் ஆக மொத்தம் 50 கோடி ரூபாயில் சுமார் 10 நூலகங்களுக்கு உண்டான அந்த இடங்களில் படிக்கின்ற அந்த நூலகத்தினுடைய தரத்தையும், பகிர்ந்த பணியிட மையம் மற்றும் கல்வி மையம் ஏற்படுத்தி தருகின்ற வகையில் திட்டமிடப்பட்டு, அந்தப் பணிகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நேற்றைய தினம் முதலமைச்சர் அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கு பிறகு வடசென்னையில் குறிப்பாக நம்முடைய திரு.வி.க. நகர் தொகுதி, எழும்பூர் தொகுதி, துறைமுகம் தொகுதி, ராயபுரம் தொகுதி, ஆர்.கே. நகர் தொகுதி மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளிலும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றார். அந்த வகையில் இன்றைக்கு சுமார் பல்வேறு இடங்களில் நூலகங்களை ஆய்வு செய்து, அந்த நூலகங்களுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவும், 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்துவதற்கு சற்று வசதி குறைவாக உள்ள நூலகங்களை இடித்துவிட்டு, புதிதாக நூலகங்களை கட்டுவதற்கு திட்டமிட்டு இன்று காலையிலே துறையினுடைய உறுப்பினர் செயலாளர் அன்பிற்கினிய திரு.அன்சுல் மிஸ்ரா அவர்களும், பெருநகர மாநகராட்சி மேயர் அன்பிற்கினிய திருமதி.பிரியா அவர்களும், இந்த தொகுதியின் உடைய சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் திரு.தாயகம் கவி அவர்களும் அதேபோல் நூலக துறையைச் சார்ந்த அதிகாரிகளும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும துறையைச் சார்ந்த அதிகாரிகளும் இணைந்து இப்பொழுது இந்த பகுதியிலே ஆய்வினை மேற்கொண்டு இருக்கின்றோம்.

இதுபோன்று தொடர்ந்து இன்றைக்கு பல்வேறு நூலகங்களை ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றோம் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகின்ற நூலகங்கள் என்று ஒரு திட்டமிடலையும் புதிதாக கட்டடங்களைக் கட்டி மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு என்று இரண்டு வகைகளாக பிரித்து ஏற்கனவே இருக்கின்ற நூலகங்களை மேம்படுத்துவதற்கான பணியை பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று புதிதாக கட்டுமானம் கட்டி திறக்க வேண்டிய இந்த பணிகளை திட்டமிட்டு ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம் என்று அனைத்து நூலகங்களையும் டிசம்பர் மாதம் 2025 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழே வசிக்கின்ற பகுதி மக்கள் படிக்கின்ற, பணி செய்கின்ற, வசதி இல்லாத பகுதிகளில் உள்ள இடங்களை தேர்வு செய்து, அந்த மக்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கும் அந்த பகுதியில் உள்ள மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் அதிக கவனம் செலுத்த தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டிருக்கின்றார், அந்த வகையிலே இன்று பல்வேறு நூலகங்களை ஆய்வு செய்ததின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள்ளாக முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு படிப்பதற்குண்டான வசதிகளோடு அர்ப்பணிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்தார்.

The post ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம் என அனைத்து நூலகங்களும் டிசம்பர் மாதம் 2025ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் : அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article