* ரோகித் அதிரடியால் ரசிகர்கள் உற்சாகம்
அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் இன்று இரவு நடக்கிறது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று இரவு அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் ஆட்டத்திறனுக்கு திரும்பியுள்ள நிலையில் இந்தியா இன்றைய ஆட்டத்திலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றும் வாய்ப்பு அதிகம். இங்கிலாந்து அணியுடன் ஜன. 22 முதல் இம்மாதம் 2ம் தேதி வரை நடந்த 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 3வது போட்டியை தவிர மற்ற போட்டிகளில் அபார வெற்றி பெற்ற இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இருப்பினும், ஒரு போட்டியில் வெல்லத் தவறியதால் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் வாய்ப்பு கைநழுவியது. இந்த நிலையில் தற்போது நடந்து வரும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டிகளிலும் வென்றுள்ள இந்தியா, 3வது போட்டியிலும் வென்றால் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்த சாதனையை நிகழ்த்தும். அதை அரங்கேற்றிக் காட்டும் உத்வேகத்தில் ரோகித் சர்மா சக முன்னணி வீரர்களுடன் இங்கிலாந்தை வீழ்த்துவதற்கான திட்டங்களை பரிசீலனை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம், இந்தியாவிடம் 3வது போட்டியிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆவதை தவிர்க்க ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து ஆறுதல் வெற்றிக்காக போராடும். 2வது ஒரு நாள் போட்டியில் 300க்கு மேல் ரன் குவித்தும் தோற்றது இங்கிலாந்து அணிக்கு மட்டுமின்றி அதன் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.
அந்த அளவுக்கு இந்திய அணியில் யாராவது அதிரடியாக ஆடி அணியை கரை சேர்த்து விடுவது, இங்கிலாந்து வீரர்கள் வயிற்றில் புளியை கரைப்பதாக உள்ளது. இம்மாதம் 19ம் தேதி தொடங்க உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் தொடரில் விளையாட உள்ள இந்த அணிகளுக்கு வெற்றி அவசியம். தவிர, ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கு முன்னதாக இரு அணிகளும் விளையாடும் கடைசி ஒரு நாள் போட்டி இதுவே. அதனால் வெற்றியுடன் சாம்பியன்ஸ் கோப்பையில் களம் காண இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
The post ஒயிட்வாஷ் சாதனை; இந்தியா பரிசீலனை; அகமதாபாத்தில் இன்று 3வது ஓடிஐ appeared first on Dinakaran.