நம்முடைய குழந்தைகள் நம்மிடம் ஓடி வந்து அம்மா நான் காலாண்டுத் தேர்வுக் கணிதப் பாடத்தில் நூற்றுக்கு 95 மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறேன் என்று சொன்னால் இன்று நம்முடைய, அடுத்த கேள்வி எப்படி இருக்கிறது தெரியுமா? உன் வகுப்பில் படிக்கும் தாரணி எவ்வளவு மதிப்பெண் எடுத்திருக்கிறாள்? என்பதாகவே இருக்கிறது.
நம்முடைய குழந்தைகள் எடுத்திருக்கக்கூடிய 95 மதிப்பெண்களைப் பாராட்டி சொல்லிவிட்டு மற்றவர்களின் மதிப்பெண்கள் எவ்வளவு? மற்ற பாடங்களின் மதிப்பெண்கள் எவ்வளவு என்று கேட்கலாம். (மற்ற மாணவர்கள் எடுத்திருக்கக் கூடிய மதிப்பெண்கள் நமக்கு அவசியம் இல்லை என்பது வேறு விஷயம்)
நமது மகனோ, மகளோ நம்மிடம் மதிப்பெண்களைச் சொல்லும்போது முதலில் வாழ்த்துகளை கூறி இப்படியே தொடர்ந்து நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும், என்று சொல்வதுதான் நல்ல ஆரோக்கியமான சூழல். உங்களுக்கு ஒரு ஆர்வம் இருந்தால் நீங்கள் இன்னும் சற்று மேலே போய் யார் முதல் மதிப்பெண் என்று கேட்கலாம்? ஒருவேளை இன்னொரு மாணவர் முதல் மதிப்பெண் எடுத்திருந்தால் அடுத்த முறை நீ இன்னும் நன்றாகத் தயார் செய்து முதல் மதிப்பெண் எடுக்க முயற்சி செய் என்று சொல்லலாம். ஆனால், இப்போதும் நமது பதில் வேறு மாதிரிதான் இருக்கிறது. ஒருவேளை உடன் படிக்கும் சக மாணவர் முதல் மதிப்பெண் எடுத்திருந்தால், அவளால் நூற்றுக்கு நூறு எடுக்க முடிகிறது. உன்னால் ஏன் எடுக்க முடியவில்லை என்றுதான் கேட்கிறோம். 95 மதிப்பெண்கள் எடுத்ததைப் பாராட்ட மறந்துவிடுகிறோம்.
இது படிப்பைப் படிப்பாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கக்கூடிய ஆரோக்கியமற்ற சூழல். ஆரோக்கியமற்ற சூழலாக இருந்தாலும் பரவாயில்லை, மருந்துகள் கொண்டு சரிப்படுத்திவிடலாம். ஆனால், இது ஆபத்தான சூழலும்கூட என்பதைச் சொல்லி எச்சரிக்கவே இந்தக்கட்டுரை.
நாம் நம்முடைய குழந்தைகளை எப்போதும் மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம். சதுரங்கப்போட்டியில் நமது குழந்தை இரண்டாவது பரிசு பெற்றிருந்தால்.. முதல்பரிசு பெற்றது யார்? என்பதே நம்முடைய கேள்வியாக இருக்கிறது. பிரியங்காவைப் பார் உன்னோடுதான் படிக்கிறாள்.. அவள் எப்படி எளிமையாக ஆடை அணிகிறாள்.. நீ ஏன் இப்படி ஆடம்பரமாக இருக்கிறாய்? மீனாவைப் பார்.. அவள் எப்படி புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள்.. நீ ஏன் இப்படி முகத்தை ‘உம்’ என்று வைத்திருக்கிறாய்? விக்னேஸ்வரனை பார் அவன் கபாடிப் போட்டியில் சிறப்பாக விளையாடுகிறான். நீ தான் எந்தப் போட்டியிலும் கலந்து கொள்வதே இல்லை. மதன்குமாரைப் பார் அவன் எப்படிச் சாப்பிட்டு நன்றாக உடலை வைத்திருக்கிறான்.. நீ தான் சாப்பிடுவதே இல்லை.. எப்போதும் சோம்பேறியாக இருக்கிறாய்..
இப்படி ஒப்பிடுவதற்குப் பெற்றோர்களிடம் ஆயிரம் காரணங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. இப்படி ஒப்பிடுவதன் மூலம் நம்முடைய குழந்தைகளிடம் இருக்கும் திறமைகள் மழுங்கடிக்கப்படுகின்றன. உங்கள் குழந்தை நன்றாகப் படித்ததால்தான் 95 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார். உங்கள் குழந்தை நன்றாக விளையாடுவதால்தான் சதுரங்கப் போட்டியில் இரண்டாம் இடம் வந்திருக்கிறார். இதை நீங்கள் முழுமையாக அங்கீகரிக்க வேண்டும், பாராட்ட வேண்டும்.
‘உனக்கு என் பாராட்டுகள் மகளே! உன்னிடம் இவ்வளவு பெரிய வெற்றியை இவ்வளவு சீக்கிரம் நான் எதிர்பார்க்கவே இல்லை.. இரண்டாம் பரிசு பெறுவாய் என்று நான் நினைக்கவேயில்லை.. நிச்சயமாக எதிர்காலத்தில் நீ முதல் பரிசு பெறுவாய், வாழ்த்துகள்’ என்று பாராட்டிப் பாருங்கள் உங்கள் மகன்/மகள் நிச்சயமாக அடுத்த முறை இன்னும் இரண்டு படிகள் உயர்ந்து காட்டுவார்கள். 95 மதிப்பெண் எடுத்திருக்கும் உங்கள் மகளிடம் ‘95 மதிப்பெண்கள் என்பது மிகப்பெரியது இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் 100 மதிப்பெண்களை நீ தொட்டுவிடலாம் வாழ்த்துகள்’ என்று சொல்லிப் பாருங்கள் நிச்சயமாக உங்கள் குழந்தைகள் அடுத்த முறை 100 மதிப்பெண்கள் பெற முயற்சி செய்வார்கள்.
இப்போது நூறு மதிப்பெண்கள் பெற்றால் கூட சில பெற்றோர்கள் வேறு மாதிரி ஒப்பிடுவதை நான் பார்த்திருக்கிறேன். ‘அம்மா நான் அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்கியிருக்கிறேன்’ என்று சொன்னால், நம்முடைய அடுத்த கேள்வி உன் வகுப்பில் படிக்கும் எத்தனை பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்கள்? என்பதாக உள்ளது. ஒருவேளை அதே வகுப்பில் ஐந்து அல்லது ஆறு மாணவிகள் எடுத்திருந்தால்.. என்ன எல்லோரும் 100 மதிப்பெண் எடுத்திருக்கிறார்கள்.. நீயும் எடுத்திருக்கிறாய்.. இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது என்று கேட்கிறார்கள்? எவ்வளவு மோசமான நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும்.
‘அறிவியலில் சதம் அடித்திருப்பது’ பாராட்டக்கூடியது. உனக்கு அப்பா இன்று ஒரு பரிசு தரப் போகிறேன்’ என்று சொல்லி ஒரு ஜாமென்ட்ரி பாக்ஸ், ஒரு பேனா, அல்லது உங்கள் மகளுக்குப் பிடித்த ஒரு நல்ல இனிப்பு பரிசளித்துப் பாருங்கள், உங்கள் மகள் உங்களை ஓடிவந்து கட்டிக்கொள்வாள்.
ஒப்பிடும் பழக்கம் பள்ளியோடும் பாடத்தோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அந்தப் பழக்கம் நம்மை விட்டு நகராமல் வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது தொற்றுநோய் போல். அவன் படித்த அதே கல்லூரியில் தான் உன்னையும் படிக்க வைத்தேன். அவன் வளாகத் தேர்வில் வெற்றி பெற்று வேலைக்குச் சென்று விட்டான். நீதான் வேலைக்குப் போகாமல் இருக்கிறாய் என்று கேட்கிறீர்கள். வளாகத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றிருக்க முடியும். ஆனால், உங்கள் மகன்/மகள் இரண்டு ஆண்டுகள் கழித்து அரசுப் போட்டித் தேர்வுகள் எழுதி நேரடியாக அரசு வேலைக்குச் செல்ல முடியுமே! அந்த வாய்ப்பை நீங்கள் உங்கள் மகன்/மகளுக்கு உருவாக்கித் தரலாமே! நீங்கள் ஏன் அப்படி சிந்திப்பதில்லை.
ஒப்பீடு என்பது ஒரு வகை குற்றம் சுமத்துதல். உங்கள் மகன்/மகள் சரியில்லை என்று தொடர்ந்து அவர்களை அவர்கள் மீது பழிபோடும் ஒரு செயல். அது அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும். அது மட்டுமில்லாமல் பெற்றோர் மீது வெறுப்புணர்வையும் ஏற்படுத்திவிடும். ஒப்பிடுதல் என்பது எப்போதும் மனப்போராட்டத்தை ஏற்படுத்தும். மனப்போராட்டம் மன அழுத்தமாக மாறும். மன அழுத்தம் மன நோயாக மாறிவிடக் கூடிய ஆபத்து இருக்கிறது. உங்கள் குழந்தைகளுக்கு இருக்கும் தனித்திறமையைப் பாராட்டி அதை வளர்த்தெடுக்க முயற்சி செய்யுங்கள்.
ஒருவேளை உங்கள் மகன் அல்லது மகளிடம் ஒப்பிடும் குணம் இருந்தாலும் அதை நீங்கள் மாற்ற வேண்டும்.’ அம்மா அவனைவிட நான் நன்றாக படிக்கிறேன், ஆனால் என்னால் மதிப்பெண் எடுக்க முடியவில்லை’ என்று உங்கள் குழந்தை உங்களிடம் சொன்னால் அவனுக்கு ‘இருக்கக்கூடிய திறமை வேறு, உனக்கு இருக்கக்கூடிய திறமை வேறு, நீ ஒப்பிட வேண்டாம்! எனக்குத் தெரிந்து உன்னிடம் விஞ்ஞானியாகும் ஆற்றல் இருக்கிறது.. நீ விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவாய்.. என்று நினைக்கிறேன், உன்னுடைய ஆர்வம் விஞ்ஞானத்தில் இருக்கும்போது வெளிநாடு சென்று அதிகம் சம்பாதிக்கும் உன் நண்பனோடு உன்னை நீ ஒப்பிட்டுக் கொள்வதில் அர்த்தம் இல்லை, உன் பாதை வேறு அவனுடைய பாதை வேறு என்று சொல்லிச் சரிப்படுத்துங்கள்.
எந்த ஒரு சிறு செயலிலும் உங்கள் மகனை, மகளை யாருடனும் ஒப்பிடாமல் அவர்களுடைய செயல்களைப் பாராட்டுங்கள். ஒப்பிடுதல் என்பது உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமையை அலர்ஜியை உண்டாக்கும். ஒப்பிடுதலை ஓரம்கட்டி அதை உடைத்துவிட்டால் உங்கள் மகன்/ மகள் அவர்கள் பாதையில் சிகரம் தொடுவார்கள். இன்னும் படிப்போம்!
The post ஒப்பிடுதல் என்னும் ஒவ்வாமையை ஓரம் கட்டுங்கள் appeared first on Dinakaran.