சென்னை,
பிரசாத் முருகன் இயக்கத்தில் பரத் நடிப்பில் கடந்த 13-ந் தேதி வெளியான படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'. இப்படத்தில் சுஹைல், ராஜாஜி, அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி உட்பட பலர் நடித்துள்ளனர். ஜோஸ் பிராங்க்ளின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பிரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி.ஆனந்த், டிரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் பிஜிஎஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த நிலையில், 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
பரத், தனது மனைவிக்கு சிறுநீரகம் செயல் இழக்க, ஆஸ்பத்திரியில் சேர்த்து பணத்துக்கு அலைகிறார். துப்புரவு பணியாளரான அபிராமியை கடன் கொடுத்தவன் இம்சை செய்கிறான். சாதி வெறிப்பிடித்த தலைவாசல் விஜய்யின் மகள் பவித்ரா லட்சுமி, வேற்று சாதி இளைஞனை திருமணம் செய்துகொள்ள தயாராகிறார். மகனுக்கு இருக்கும் குறைகளை மறைத்து, பெற்றோர் அஞ்சலி நாயரை திருமணம் செய்து வைத்து தவறாக பயன்படுத்துகின்றனர்.
இந்த நான்கு கதைகளையும் ஒரு கைத்துப்பாக்கி எப்படி இணைக்கிறது என்பதும், இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதும் கதை…
ஆட்டோ டிரைவராக வரும் பரத் காதல், கோபம், விரக்தி, இயலாமை என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தி கதாபாத்திரத்துக்கு உயிரூட்டி இருக்கிறார். நோயுற்ற மனைவியை காப்பாற்ற போராடும் காட்சிகளில் உருகவும் வைக்கிறார்.
அபிராமி நடிப்புக்கு தீனி போட்டுள்ள படம். அன்பான தாயை கண்முன் நிறுத்தும் அவர் கிளைமாக்சில் ஆவேசமாகி அதிர வைக்கிறார். கோபத்தில் எடுத்த முடிவை நினைத்து கலங்கும் தலைவாசல் விஜய், இல்லற வாழ்க்கையில் வலிகளை சுமந்து தவிக்கும் அஞ்சலி நாயர், மற்றும் பவித்ரா லட்சுமி, ராஜாஜி, கனிகா, ஷான், கல்கி, பிஜிஎஸ், அரோல் டி.சங்கர் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
கே.எஸ்.காளிதாஸ், கண்ணா ஆகியோர் ஒளிப்பதிவு காட்சிகளோடு ஒன்ற செய்துள்ளது. ஜோஸ் பிராங்க்ளின் பின்னணி இசை பலம். வெவ்வேறு கதைகளுக்கு தாவுவதில் சில குழப்பம் இருந்தாலும், அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை எகிற செய்து இருப்பது திரைக்கதையின் பலம்.
கதையை முதன்மைப்படுத்தி அதற்கு பொருத்தமான கதாபாத்திரங்களை வடிவமைத்து தரமான படைப்பாக கொடுத்து கவனம் பெறுகிறார் இயக்குனர் பிரசாத் முருகன். தொடர்பு இல்லாத நான்கு கதைகளை வெவ்வேறு கோணத்தில் நகர்த்தி, இறுதியில் அவற்றை ஒரே முடிச்சுக்குள் கொண்டு இணைத்து இருப்பதில் இயக்குனர் திறமை பளிச்சிடுகிறது.