ஒன்றுபட்டால் உண்டு உயர்வு!

3 hours ago 2

இரண்டு பெண்களால் ஒரு வேலையை இணைந்து செயல்படுத்த முடியாது என்று சொல்வதெல்லாம் மூடநம்பிக்கை. இன்று பல பெண்கள் தங்களின் தோழிகளுடன் சிறு தொழில் முதல் பெரிய நிறுவனம் வரை ஒன்றாக இணைந்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் பல்வேறு துறையை சார்ந்த பெண் தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து Woman Professional Connect (WPC) என்ற அமைப்பு மூலம் ஒருவருக்கொருவர் உதவி செய்து தங்களின் தொழிலை உயர்த்தி வருகிறார்கள்.

WPC 2019ல் மதுரையில் துவங்கப்பட்டு அதன் பிறகு சென்னை, கோவை, திருச்சி, பெங்களூரூ, புதுச்சேரி என அனைத்து இடங்களிலும் 120க்கும் மேற்பட்ட பெண் தொழிலதிபர்களை ஒன்றிணைத்து, தங்களுக்குள் கை கொடுத்து உயர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறார்கள். பெண் தொழிலதிபர்களுக்காக இந்த அமைப்பினை துவங்கிய ரேணுகா அமைப்பின் செயல்பாடு குறித்து விவரித்தார்.

‘‘நான் சென்னை பொண்ணு என்றாலும் படிச்சது, வளர்ந்தது எல்லாம் மதுரையில். அப்பா மதுரையில் டெக்ஸ்டைல் பிசினஸ் செய்து வருகிறார். தம்பி அப்பாவுடன் இணைந்து பிசினஸ் பார்த்துக் கொள்கிறார். என் கணவருக்கு சென்னையில் வேலை என்பதால் நாங்க சென்னையில் இருக்கிறோம். படிப்பு முடிந்ததும் திருமணமானது. சென்னைக்கு வந்தவுடன் வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் டியூஷன் சென்டரில் அறிவியல் பாடங்கள் சொல்லிக் கொடுத்தேன்.

அதன் பிறகு என் கணவருக்கு கோவையில் வேலை மாற்றம் ஏற்பட்டதால், நாங்க கோவைக்கு வந்தோம். அங்கு தனியார் நிறுவனத்தில் மனிதவள துறையில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு வேலைக்கு ஆட்களை அவர்களின் திறமையைப் பார்த்து நியமிப்பதுதான் என் வேலை. கோவையில் உள்ள பெரிய பெரிய நிறுவனங்களுக்கெல்லாம் நாங்க தான் வேலைக்கு ஆட்களை சேர்த்து வந்தோம். அதனால் எனக்கு அந்த துறையில் நல்ல அனுபவம் கிடைத்தது. அந்த சமயத்தில் நான் கருவுற்றதால், குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால், பார்த்த வேலையை ராஜினாமா செய்தேன்.

வீட்டில் இருந்தபடியே பகுதி நேரமாக ஏதாவது பிசினஸ் செய்யலாம்னு நினைச்சேன். நான் HR துறையில் இருந்ததால், நிறுவனங்கள் வேலைக்கான ஆட்களின் தகுதி என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியும். அதனைக் கொண்டு கல்லூரி மாணவர்கள் நேர்காணல் குறித்தும், கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு அவர்களின் திறமையை மேலும் உயர்த்த என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன். இதில் கம்யூனிகேஷன், சாஃப்ட் ஸ்கில், லாஜிஸ்டிக்ஸ் போன்ற பயிற்சிகளும் அளித்தேன்.

அதன் பிறகு 2018ல் கார்மெட் சொல்யூஷன்’ என்ற பெயரில் நிறுவனம் துவங்கி அதில் பெண்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி தந்து வருகிறேன். தற்போது என் நிறுவனத்தில் 35 பெண்கள் முழு நேரமாகவும், 150 பேர் பகுதி நேரமாகவும் வேலை பார்த்து வருகிறார்கள். என்னுடைய நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி, சப்டைட்டில்ஸ், ஆடியோ, வீடியோ கன்வெர்ஷன், ரெக்ரூட்மென்ட் ட்ரையினிங் போன்ற பணிகளை செய்து வருகிறோம். இதனைத் தொடர்ந்த ‘குட்டி ஸ்டோரி’ என்ற பெயரில் புகைப்பட ஸ்டுடியோ ஒன்றை துவங்கினேன். இதில் நன்கு பயிற்சி பெற்ற புகைப்படக் கலைஞர்களை வைத்து திருமணம், காது குத்து, வளைகாப்பு என அனைத்து நிகழ்ச்சிக்கும் புகைப்படம் எடுத்து தருகிறேன்’’ என்றவர் WPC துவங்கியதற்கான காரணத்தை விவரித்தார்.‘‘இந்த அமைப்பு பெண் தொழில் அதிபர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கப்பட்டது.

உதாரணமாக திறமையுள்ள இளம் மற்றும் நடுத்தர வயது இல்லத்தரசிகள், தொழில் துவங்க விரும்பினால் அவர்களை சந்தித்து தேவையான நிதி உதவிகள் மட்டுமில்லாமல் அவர்
களின் தொழில் சிறக்க வழிகாட்டி, ஆலோசனையும் கொடுத்து வருகிறோம். ஒரு பெண் தொழில் அதிபரால் மட்டுமே மற்றொரு பெண் தொழில் அதிபருக்கு உதவ முடியும். நான் உனக்கு துணையாக இருக்கிறேன். நீயும் எனக்கு தேவையான உதவிகளை செய் என்று ஒருவருக்கு ஒருவர் ஆதரவாய், உதவியாய், உறுதுணையாய், உயிர் தோழியாக செயல்பட வைப்பதே எங்க அமைப்பின் நோக்கமாகும்.

தொழில் ரீதியாக மட்டுமில்லாமல், குடும்ப நட்பு, பாசம், நேசமுள்ள தோழிகளாகவும் பழகுகிறோம். இதன் மூலம் ஒருத்தருக்கு ஒருத்தர் பரஸ்பர உதவிகளை செய்து கொள்ள உதவியாக இருக்கிறது. நூறு ரூபாய் சம்பாதிக்க ஆசைப்பட்டவர்கள் இப்போது லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இரண்டு பேருக்கு டியூஷன் எடுத்தவர்கள் இன்று நிறுவனம் அமைத்து ஆன்லைனில் பலருக்கு டியூஷன் எடுக்கிறார்கள்.

எங்க அமைப்பிற்கு சென்னையில் மூன்று சேம்பர்கள் உள்ளன. மதுரை, திருச்சி, கோவை, பெங்களூரில் இரண்டும், புதுச்சேரி மற்றும் திருச்சியில் தற்போது புதிதாக துவங்கி இருக்கிறோம். இதில் மருத்துவர்கள், மேக்கப் ஆர்டிஸ்ட், ஃபேஷன் டிசைனர்கள், பிசியோதெரபிஸ்ட், HR அதிகாரிகள், ஆடிட்டர்கள், கட்டிடக் கலைஞர்கள் என பல்வேறு துறையில் இருக்கும் பெண்கள் அங்கம் வகித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருந்து வருகிறார்கள்’’ என்றவர் ஆண்கள் தினமன்று சிறந்த ஆண்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறார்.

‘‘ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் கண்டிப்பாக ஆண் இருப்பார். அது அப்பா, கணவன், சகோதரர் அல்லது நண்பராக கூட இருக்கலாம். அவர்களை கவுரவிக்கும் வகையில் ஆறு ஆண்டு
களாக, ஆண்கள் தினத்தன்று பல துறையில் சிறந்து விளங்கும் தகுதியான நேர்மையான பெண்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறோம். இந்தாண்டு மதுரையில் 99 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் மதுரை கலெக்டராக பணிபுரிந்த லட்சுமிகாந்தன் பாரதி மற்றும் பலருக்கு விருது வழங்கி கௌரவித்தோம்.

எங்களின் அடுத்தகட்ட திட்டம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள பெண் தொழிலதிபர்களை ஒருங்கிணைக்க வேண்டும். இதன் மூலம் மேலும் பல புதிய ெபண் தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும்’’ என்ற ரேணுகா இளம் தொழிலதிபர், சிறந்த சப்போர்ட்டிங் தொழிலதிபர் போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

விஜயா கண்ணன்

The post ஒன்றுபட்டால் உண்டு உயர்வு! appeared first on Dinakaran.

Read Entire Article