மதுரை, பிப். 8: ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, மதுரையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜ அரசின் பட்ஜெட் ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வை நாசமாக்கும் வகையில் இருக்கிறது. இந்த பட்ஜெட்டால் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் வஞ்சிக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் உள்ள பெரும் முதலாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி, பொதுமக்களை ஒன்றிய பாஜ அரசு சீரழிக்கும் பட்ஜெட்டை அறிவித்திருக்கிறது.
இதேபோல், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் போன்றவற்றுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப் பணிகளை பட்ஜெட்டில் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்று கூறி ஒன்றிய அரசின் பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை, மகபூப்பாளையத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு பகுதிக்குழு செயலாளர் பாண்டி தலைமை தாங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜ அரசிற்கு எதிராக உரையாற்றினர். இதில் பங்கேற்றோர் ஒன்றிய அரசு மற்றும் அதன் பட்ஜெட்டிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
The post ஒன்றிய பட்ஜெட்டை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.