ஒன்றிய பட்ஜெட்டில் ஜோலார்பேட்டை-கிருஷ்ணகிரி-ஓசூர் ரயில்வே திட்டம் மீண்டும் புறக்கணிப்பு: மாவட்ட மக்கள் ஏமாற்றம்

2 hours ago 1

கிருஷ்ணகிரி: ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஜோலார்பேட்டை-கிருஷ்ணகிரி-ஓசூர் ரயில்வே திட்டம் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இயற்கை வளங்கள் கொட்டி கிடக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவளங்கள் அதிகளவில் உள்ளன. இந்த மண்ணில் கிடைக்கும் கிரானைட் கற்கள், மாங்கூழ், ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இத்தனை வசதிகள் இருந்தும், இம்மாவட்ட மக்களுக்கு ரயில் போக்குவரத்து மட்டும் கானல் நீராக உள்ளது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில், நாடு முழுவதும் ரயில்வே போக்குவரத்து தொடங்கப்பட்டது. கடந்த 1905ம் ஆண்டு திருப்பத்தூரில் இருந்து பர்கூர் வழியாக, கிருஷ்ணகிரி வரை ரயில்பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால், 1942ம் ஆண்டு கிருஷ்ணகிரி வரையிலான ரயில் பாதை வசதி துண்டிக்கப்பட்டது. இந்த தடத்தில் போதிய வருமானம் கிடைக்காததால், அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை, சுமார் 82 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மக்களுக்கு ரயில் போக்குவரத்து வசதி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், ரயில் செல்லாத ஒரே மாவட்ட தலைநகரம் என்று சொன்னால், அது கிருஷ்ணகிரி தான். ஏறத்தாழ அனைத்து மாவட்ட தலைநகரங்கள் வழியாக ரயில்கள் செல்லும் நிலையில், ரயில் போக்குவரத்து இல்லாத நகரமாக கிருஷ்ணகிரி உள்ளது. 82 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி நகர மக்கள், கிருஷ்ணகிரி வழியாக இயக்கப்பட்ட ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும். அதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி 1952ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, இதுவரை 17 தேர்தல்களை சந்தித்த நிலையில், போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் வாக்குறுதியிலும், கிருஷ்ணகிரி ரயில்வே பாதை திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினாலும், இதுவரை ரயில்வே திட்டத்தை தொடங்குவதற்கான செயல்பாடுகள் எதுவும் இல்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, கிருஷ்ணகிரி ரயில் பாதை திட்டம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய்ந்து, அறிக்கை தாக்கல் செய்யவும், திட்ட மதிப்பீடு தெரிவிக்கவும், நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்தன. இதனால், இந்த முறை ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூர் வரை ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு அறிவிக்கும். அதற்கான நிதி ஒதுக்கும் என்றும் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 1ம் தேதி ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ஆவது கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் 82 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறும் வகையில் அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் மாவட்ட மக்கள் காத்திருந்தனர். ஆனால், இந்த பட்ஜெட்டிலும் ரயில்வே திட்டத்திற்கான அறிவிப்பு வராததால், மாவட்ட மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அத்துடன் ஒன்றிய பாஜ அரசு மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

The post ஒன்றிய பட்ஜெட்டில் ஜோலார்பேட்டை-கிருஷ்ணகிரி-ஓசூர் ரயில்வே திட்டம் மீண்டும் புறக்கணிப்பு: மாவட்ட மக்கள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article