டெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையை வைத்து தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆதர்ஷ் என்பவர் அளித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்டோரின் தூண்டுதலின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பெங்களூருவில் உள்ள மக்கள் பிரிதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. ஒன்றிய நிதியமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் குற்றவாளி என்பதால் நிதியமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
தேர்தல் பத்திரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருகிறது. அதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்தனர். தேர்தல் பத்திர முறைகேடு விவகாரத்தில் நிதி மந்திரி தன்னிச்சையாக செயல்பட முடியாது என தெரிவித்த காங்கிரஸ் நிர்வாகிகள், இதில் நம்பர் 1, 2 யார் என்பதும், யார் வழிகாட்டுதலில் இவை நடந்தது என்பதும் நமக்கு தெரியும் என்றும் கூறினர்.
The post ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும்: காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.