திருப்பரங்குன்றம்: புதிய தேசிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிப்பதாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயில் மற்றும் மலை மீது உள்ள காசி விசுவநாதர் கோயில்களில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் ஆகியோர் நேற்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டி: திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் சிலர் விரும்பத்தகாத சம்பவங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் நடைமுறை என்னவோ அதை பின்பற்ற வேண்டும். தேசிய கல்விக் கொள்கை ஒரு நாளில் கொண்டு வந்தது அல்ல. புதிய கல்விக் கொள்கை ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கும், மாணவர்களின் பங்களிப்பை அதில் கொடுப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது.
தாய்மொழியை ஊக்குவிக்கிறது புதிய கல்விக் கொள்கை. தாய்மொழியில் தான் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதுதான் புதிய கல்விக் கொள்கை. சாதாரண அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வேறு மொழியை கற்பதில் என்ன பிரச்னை? நான் இந்த மொழியை தான் கற்று கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. மூன்று மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். பள்ளிகளை தரமாக இயக்குவதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு சரி செய்து வருகிறது. திட்டத்திற்கான நிபந்தனை என்னவோ, அதில் கையெழுத்து போட்டு விட்டால், நாங்கள் நிதி கொடுக்கிறோம் என்று தான் சொல்கிறோம். இவ்வாறு கூறினார்.
The post ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல் புதிய தேசிய கல்விக்கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கிறது appeared first on Dinakaran.