நா டாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி மூன்று நாட்களாக எந்த உருப்படியான விவாதமும் இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றம் கூடிய முதல்நாளில் பேட்டியளித்த பிரதமர் மோடி, ‘மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தை முடக்க முயற்சி செய்கின்றனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எதிர்க்கட்சிகள் நடந்து கொள்ள வேண்டும்’ என்றார். இவர் சொல்வது எப்படி இருக்கிறது பாருங்களேன். ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் நாட்டுக்கும், நாட்டு வளங்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நாட்டின் வளங்களை எல்லாம் சுரண்டி எடுத்துக்கொள்ள அம்பானி, அதானிக்கு அனுமதி வழங்கிய பிரதமர் மோடி, அவர்கள் முறைகேடுகள் குறித்து யாருமே பேசக்கூடாது என்பது ஜனநாயகமா?.
அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி வரை லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தார் அதானி என்று அமெரிக்க நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. இங்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த 10 ஆண்டாக அதானி, அம்பானியின் முறைகேடுகளை விமர்சித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய ஒற்றுமை பாதயாத்திரையின் ேபாதும், தேர்தல் பிரசாரத்தின் போதும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அதானி, அம்பானியின் ஊழல்களை பகிரங்கப்படுத்தினார். தற்போது அது ஊர்ஜிதமாகும் வகையில் அமெரிக்க நீதிமன்றம் அதானிக்கு எதிராக குற்றச்சாட்டை வைத்துள்ளது. இது குறித்து மக்களவையில் ஆரோக்கியமான விவாதம் அவசியம் தேவைப்படுகிறது.
எனவே ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சிகளுக்கு அதானி விவகாரம் குறித்து விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளையும், கேள்விகளையும் ஆளும் கட்சி எதிர்கொள்ள பயப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் ஒன்றிய அரசு, தாங்கள் கொண்டுவரும் மசோதாக்களை நிறைவேற்றிக்கொள்ளவே நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துகிறது. சாதாரண குற்றங்களுக்காக நூற்றுக்கணக்கானோர் ைகதாகி சிறையில் இருக்கிறார்கள். பல ஆயிரம் கோடி ஊழல் செய்த அதானியை இதுவரை கைது செய்யாதது ஏன் என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்புகிறார். மக்களவையில் அவரை பேச அனுமதிப்பதில் என்ன தயக்கம்.
ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் காங்கிரசை மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்று பிரதமர் மோடி எப்படி முத்திரை குத்தலாம். மக்களவையில் அதானி குறித்தும், மணிப்பூர் கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கேள்விக்கு பிதமர் மோடி பதிலளிப்பதை தவிர்த்து, மக்களவை நேரத்தை காங்கிரஸ் வீணடித்து வருகிறது என்று பழிபோட்டு தப்பித்து கொள்வது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். மக்களவையில் எந்த நடவடிக்கையும் இல்லாமல் மூன்று நாட்களாக முடங்கியுள்ளதற்கு ஒன்றிய பாஜ அரசு தான் காரணம். எதிர்க்கட்சிகள் மக்களவைக்கு சுற்றுலா பயணிகள் போல் வந்து செல்ல வேண்டும் என்று ஒன்றிய அரசு கருதுகிறது.
மக்கள் பிரச்னை குறித்து அவர்கள் பேசவே கூடாது என்று நினைக்கிறது. இது சர்வாதிகாரத்தின் உச்சம். ஜனநாயகத்தை முடமாக்கும் முயற்சி. எனவே எதிர்க்கட்சிகளின் கோரிக்கை, முழக்கம், போராட்டம் நியாயமானது. அதானி, மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விவாதம் தற்போது மிக மிக அவசியம். எனவே எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு பணிய வேண்டும். இரு அவைகளிலும் ஆரோக்கியமான விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும். மக்களின் சந்தேகங்களை மக்களவையில் ஆளும் பாஜ அரசு நிவர்த்தி செய்ய வேண்டும்.
The post ஒன்றிய அரசு பணிய வேண்டும் appeared first on Dinakaran.