ஒன்றிய அரசு நிதி வழங்காத நிலையில் 2026க்குள் 19 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடம் நிரப்பப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

6 months ago 15

அரக்கோணம்: ஒன்றிய அரசு நிதி வழங்காததால் மாநில அரசால் அனைத்தும் செய்யப்படுகிறது. வரும் 2026க்குள்ளாக 19 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமூச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியை எலிசபெத் உள்பட 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீரென வந்து ஆய்வு செய்தார். மாணவ, மாணவிகளை பாட புத்தகத்தை படிக்க வைத்து வாசிப்பு திறனை சோதித்தார். இதையடுத்து, ஆசிரியர்கள் பாடம் எடுப்பதை மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து கவனித்தார். பின்னர், பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு மையம், அங்கன்வாடி மையம், ஸ்மார்ட் வகுப்பறை, கழிவறை ஆகியவற்றை பார்வையிட்டார்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தொடக்கப்பள்ளிகளில் 98.8 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. இதனால், மாணவர்களின் தேவைக்கு ஏற்ப வரும் 2026க்குள்ளாக 19ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அதேபோல், கூடுதல் பள்ளிக் கட்டிடங்கள் பற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். ஒன்றிய அரசு மும்மொழி கல்வி கொள்கையை அமுல்படுத்த சொல்கிறது. நாம், நடைமுறை படுத்தாததால் நிதி வழங்குவதில்லை. இதனால், மாநில அரசு மூலமே அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றிய அரசு நிதி வழங்காத நிலையில் 2026க்குள் 19 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடம் நிரப்பப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article