புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இது குறித்து கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘தற்போதுள்ள 7வது ஊதியக் குழுவின் ஆயுட்காலம் இந்த ஆண்டோடு முடிகிறது. எனவே 8வது ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக ஊதியக் குழு ஆணையத்தின் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். 7வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் முடியும் முன்பாகவே புதிய ஊதிய கமிஷன் 2025ம் ஆண்டிலேயே அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் பெறப்படுவது உறுதி செய்யப்படும். இதுதொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்படும்’’ என்றார்.
தற்போது நாடு முழுவதும் 49 லட்சத்திற்கும் அதிகமான ஒன்றிய அரசு ஊழியர்களும், சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். 1947 முதல் இதுவரை 7 ஊதிய கமிஷன்களை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான சம்பள விகிதங்கள், சலுகைகள் மற்றும் அலவன்ஸ்களை நிர்ணயிப்பதில் ஊதியக் குழு முக்கிய பங்கு வகிக்கிறது. அரசுக்கு சொந்தமான பெரும்பாலான நிறுவனங்கள் ஊதியக் குழு ஆணையத்தின் பரிந்துரைகளையே பின்பற்றுகின்றன.
கடைசியாக, 7வது ஊதியக் குழு கடந்த 2014ல் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் பெறப்பட்டு, 2016ல் அவை செயல்படுத்தப்பட்டன. ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை ஊதியக் குழு அமைக்கப்படுவது வழக்கம். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்ததால், தற்போதைய 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2026 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016ல் 7வது ஊதியக் குழு அமல்படுத்திய போது அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ஏவுதளம்
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஏவுதளம், அடுத்த தலைமுறை ராக்கெட்டுகளை ஏவுவதற்கான ஏவுதளமாக இருக்கும். மேலும், இது இஸ்ரோ அதிகளவில் விண்கலங்களை விண்ணில் செலுத்துவதற்கும், விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லவம், விண்வெளி ஆய்வு திட்டங்களுக்கும் உதவும். இந்த ஏவுதளம் ரூ.3985 கோடியில் அடுத்த 4 ஆண்டு காலத்திற்குள் நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
The post ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழு அமைக்க ஒப்புதல்: பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவையில் முடிவு appeared first on Dinakaran.