ஒன்றிய அரசு அறிவித்த கூடுதல் 10,000 எம்பிபிஎஸ் இடங்களில் தமிழ்நாட்டுக்கு ஒன்று கூட கிடைக்காது: பட்ஜெட் அறிவிப்பால் பலன் இல்லை

2 hours ago 2

சென்னை: ஒன்றிய அரசு பட்ஜெட்டில் அறிவித்த 10 ஆயிரம் எம்பிபிஎஸ் கூடுதல் இடங்களில் தமிழகத்துக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டில் உள்ள 695 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தற்போது சுமார் 1 லட்சத்து 12 ஆயிரம் இடங்கள் உள்ளன. அரசுக் கல்லூரிகளில் 55648 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50685 இடங்களும் உள்ளன. இவை நீட் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. கவுன்சலிங் மூலம் 91927 எம்பிபிஎஸ் இடங்களும், பிடிஎஸ் 26949 இடங்களும் 2024ம் ஆண்டில் நிரப்பப்பட்டன.

இந்நிலையில், 5150 இடங்கள் சேர்க்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஒன்றிய அரசின் பட்ஜெட் உரையின் அறிவிப்பில், 2025ம் ஆண்டில் 10 ஆயிரம் மருத்துவ இடங்கள் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில், எத்தனை இடங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது. இருப்பினும், மாநில வாரியாக பார்க்கும் போது ஒரு மாநிலத்துக்கு எம்பிபிஎஸ் இடங்கள் பகிர்ந்தளிப்பதில், ஒவ்வொரு 10 லட்சம் பேருக்கும் 100 இடங்கள் என்று நிர்ணயம் செய்யப்படுவதால், அடுத்த ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் உறுதியளிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் கூடுதல் மருத்துவ படிப்புக்கான இடங்களில் தமிழ்நாட்டுக்கு இடங்கள் கிடைக்காமல் போகலாம்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறை 2023ல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, புதிய மருத்துவ கல்வி நிறுவனங்களை நிறுவுதல், புதிய மருத்துவப் படிப்புகளை தொடங்குதல், தற்போதுள்ள படிப்புகளுக்கான இடங்களை அதிகரிப்பது குறித்து ஒன்றிய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கல்லூரிக்கு 150 இடங்கள் என எம்பிபிஎஸ் வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகள் இந்த விதியை பின்பற்ற வேண்டும் என்றும், ஒவ்வொரு 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட யூனியன் பிரதேசங்களில் 100 இடங்்கள் என்பதையும் பின்பற்ற வேண்டும்.

இந்நிலையில் 2024ம் கல்வி ஆண்டில் முதல் விதி நீக்கப்பட்டது. மேலும், 2024-2025ம் கல்வி ஆண்டில் இரண்டாவது விதியை அமல்படுத்துவது ஒத்தி வைக்கப்பட்டது என்று மருத்துவக் கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், 8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 70க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 12 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில் மேற்கொண்டு கூடுதல் கல்லூரிக்கு தமிழ்நாடு விண்ணப்பிக்க முடியாது என்று தமிழ்நாடு மாநில மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களும் இதே பிரச்னையை சந்திக்கும்.

பெரும்பாலான மருத்துவர்கள், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தில் இடம் பெற்றுள்ள மருத்துவர்கள் தேசிய மருத்துவ கழகத்தின் விதிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதாவது பரிந்துரைக்கப்பட்ட மருத்துவர்களின் விகிதாச்சாரம் 1:1000தான். ஆனால், குறைந்தபட்சமாக 1 லட்சத்து 50 ஆயிரம் மருத்துவர்கள் தற்போது மருத்துவம் பார்த்துவரும் நிலையில் தமிழ்நாட்டில் ஏற்கெனவே 1:1600 விகிதாச்சாரம் உள்ளனர். எனவே ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு மருத்துவ இடங்களை ஒதுக்க வாய்ப்பில்லை என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

* 8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 70க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 12 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில் மேற்கொண்டு கூடுதல் கல்லூரிக்கு தமிழ்நாடு விண்ணப்பிக்க முடியாது

The post ஒன்றிய அரசு அறிவித்த கூடுதல் 10,000 எம்பிபிஎஸ் இடங்களில் தமிழ்நாட்டுக்கு ஒன்று கூட கிடைக்காது: பட்ஜெட் அறிவிப்பால் பலன் இல்லை appeared first on Dinakaran.

Read Entire Article