ஒன்றிய அரசின் பணிகளுக்கு 58 பேர் தேர்ச்சி மீண்டும் சாதித்த நான் முதல்வன் திட்டம்

14 hours ago 2

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுக்கென தனிப்பிரிவு துவங்கப்பட்டு வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக, ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி கட்டணமில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி மேற்கொண்ட மாணவர்களில், கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை நடைபெற்ற ஒன்றிய அரசின் பணிகளுக்கான தேர்வில் 58 பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக திறன் மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.  எஸ்எஸ்சி மற்றும் ரயில்வே பணிகளுக்கான தேர்வில் 21 மாணவர்களும், வங்கி பணிகளுக்கான தேர்வில் 37 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த மாதம் வெளியான இந்திய குடிமைப் பணி தேர்வு வெளியீட்டில் நான் முதல்வன்” திட்டத்தில் பயிற்சி பெற்ற 50 மாணவ-மாணவிகள் வெற்று பெற்று சாதனை படைத்துள்ளனர். அதனைத்தொடர்ந்து எஸ்எஸ்சி, ரயில்வே மற்றும் வங்கி பணிகளுக்கு நடைபெற்ற ஒன்றிய அரசின் பணிகளுக்கான தேர்வில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை, சேலம், விருதுநகர் ஆகிய நகரங்களில் மாணவ-மாணவிகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டது.

நடப்பாண்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களிலும் நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பணிகளில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி குறைந்த காரணத்தால் கடந்த ஆண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு நடைபெறும் ஒன்றிய அரசின் பணிகளுக்கான தேர்வில் பயிற்சி பெற https://portal.naanmudhalvan.tn.gov.in/competitive_exams என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள மாணவர்கள் வருகிற 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* முதல்வர் பெருமிதம்
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று ஒன்றிய அரசின் SSC, ரயில்வே மற்றும் வங்கி பணிகளுக்கு நடந்த தேர்வில் 58 பேர் தேர்ச்சி பெற்றதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: நாள்தோறும் சாதனைகள் படைக்கும் திராவிட மாடல் என்றேன்; இன்றைய சாதனை இது! நம் தமிழ்நாட்டு மாணவர்கள் ஒன்றிய அரசின் போட்டி தேர்வுகளில் இன்னும் நிறைய தேர்ச்சி பெற்று, உயர் பொறுப்புகளில் சாதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஒன்றிய அரசின் பணிகளுக்கு 58 பேர் தேர்ச்சி மீண்டும் சாதித்த நான் முதல்வன் திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article