ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு

3 months ago 23

சென்னை: ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா தினத்தில் வழங்கப்படும் ‘சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக’ கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவு: தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையால் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் அறிவியல் காலக்கணிப்பு கி.மு.ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்ததையும், கங்கைச் சமவெளியின் நகரமயமாக்கலுக்கு சமகாலமானது என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது. கி.மு.ஆறாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகம் கல்வியறிவும் எழுத்தறிவும் பெற்றிருந்தனர் என்பதை அறிவியல் அடிப்படையில் நிலைநிறுத்தியுள்ளது.

தமிழர்களின் தொன்மை, பண்பாடு, நாகரிகம், கல்வியறிவு, எழுத்தறிவு, உலகின் பல்வேறு பகுதியுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு ஆகியவற்றினை பறைசாற்றும் விதத்திலும், அதனை உலகிற்கு வெளிக்கொணரும் வகையிலும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உலகத் தமிழர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் ரூ.18.43 கோடி செலவில் அமைக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகம் 2023ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில், பழந்தமிழ் சமூகத்தின் முற்போக்கு சிந்தனைகள் பொருந்திய சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அருங்காட்சியகத்தை உள்ளம் குளிர கண்டு களிக்கின்றனர்.

தற்போது, ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா தினத்தில் வழங்கப்படும் ‘சிறந்த பாரம்பரிய சுற்றுலாதலமாக’ கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழர்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய செய்தியாகும். ஒன்றிய அரசின் சுற்றுலாத் துறையால் ‘சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக’ கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. “உலகெங்கும் வாழும் தமிழர்களே கீழடிக்கு வருக நம் வரலாற்றைப் பருக என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article