புதுடெல்லி: பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் மற்றும் வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டங்களை 2025-26ம் நிதியாண்டு வரை நீட்டிக்கவும், கூடுதல் உர மானியத்தை மேலும் ஓராண்டுக்கு தொடரவும் ஒன்றிய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன் மூலம், இரு காப்பீட்டு திட்டங்களின் மொத்த செலவு 2020-21 முதல் 2024-25 வரை ரூ.66,550 கோடியாக இருந்த நிலையில், 2021-22 முதல் 2025-26 வரை ரூ.69,515.71 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 2025-26 வரை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இயற்கைப் பேரழிவுகளிலிருந்து பயிர்களை பாதுகாக்க உதவும். இது தவிர, காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை, இழப்பீட்டைக் கணக்கிடுதல் மற்றும் கோரிக்கைகளை தீர்த்து வைத்தல் ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்கு பெரும் அளவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்து, ரூ.824.77 கோடி தொகுப்பு நிதியுடன் புத்தாக்கங்கள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிதியத்தை உருவாக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் பயிர் சேதங்கள் விரைவில் கணக்கெடுக்கப்பட்டு, கிளைம்கள் உடனுக்குடன் வழங்கப்படும். மேலும், விவசாயிகளுக்கு மலிவு விலையில் டை-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ஜனவரி 1, 2025 முதல் மறு உத்தரவு வரை கூடுதல் மானியத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.3,850 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் மானியம், டிஏபி உரத்தின் சில்லறை விலை 50 கிலோவுக்கு ரூ.1,350 ஆக பராமரிக்க உதவுகிறது என கூறப்பட்டிருந்தது.
* விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு
அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில், ‘‘விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் ஒன்றிய அரசு முனைப்புடன் உள்ளது. நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாய சகோதர, சகோதரிகள் அனைவரையும் நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது. 2025ம் ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் விவசாயிகளின் வளத்தை மேம்படுத்தும் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது’’ என்றார்.
The post ஒன்றிய அமைச்சரவை முடிவு 2 பயிர் காப்பீட்டு திட்டங்கள் நீட்டிப்பு: கூடுதல் உர மானியம் தொடரும் appeared first on Dinakaran.