இசையும் இன்னிசையும்

2 days ago 3

எது மனதுக்கு சுகம் தெரியுமா? பூஜை அறையில் பாடுவது. விடியலில், அதுவும் இந்த மார்கழி மாதபனி விடியலில் பாடுவது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். ஆற்றாமையைத் தீர்க்கும். மனதில் தெளிவைத் தரும். இறைவனின் அருளை பெற்றுத் தரும். இசைக்கு மயங்குபவன் அல்லவா அவன். அவனே இசை வடிவம்தானே. என்னுடைய நண்பர் ஒருவர் அழகாகப் பாடுவார். அவர் எப்பொழுதும் ஏதாவது ஒரு பக்திப் பாடலை அல்லது தேவாரத்தை, திருவாசகத்தை, ஆழ்வார் பாசுரத்தை முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். அவருக்கு 82 வயதுக்கு மேல் ஆகிறது. இப்பொழுதும் காலையில் எழுந்து ஒரு மணி நேரம் பூஜை செய்வார்.

அந்தப் பூஜை முழுக்க உருகி உருகிப்பாடுவார். அவருக்கு எந்தக் குறையும் இல்லை. உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. அதற்கு அவர் சொல்லுகின்ற ஒரு முக்கியமான காரணம், பாடுவதுதான் என்கிறார்.‘‘நான் என்க்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து பாடுகின்ற வேலையைச் செய்து வருகின்றேன். சின்ன வயதில் கோயில்களுக்குப் போனால் ஏதாவது ஒரு பிராகாரத்தில் அமர்ந்து என்னை மறந்து அந்த தலத்துக்கு உரிய பாடலைப் பாடிவிட்டுத் தான் வருவேன். அல்லது பிரகாரத்தை வலம் வருகின்ற பொழுது மெல்ல பாடிக் கொண்டே வலம் வருவேன்.

இதனால் எனக்கு ஏற்பட்ட பலன்கள் அதிகம். முதலில் என்னுடைய ஆரோக்கியம் சீராக இருப்பதை அனுபவிப்பேன். ஆரோக்கியம் என்றால் மனதும் ஆரோக்கியமாக இருக்கும். உடம்பும் ஆரோக்கியமாக இருக்கும். நான் கோயிலுக்குச் சென்று காலையும் மாலையும் வலம் வருவதோடு சரி. அதற்கென்று தனியாக எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை. ஆனால், இந்த பயிற்சியே என்னுடைய ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்கிறது. அதைவிட முக்கியம் என்னுடைய மனச்சுமை குறைகிறது. எத்தனையோ மன அழுத்தங்கள் இருந்தாலும், கோயிலுக்குச் சென்றோ, அல்லது பூஜை அறையில் கொஞ்சம் பாடிவிட்டோ சென்றால் அன்றைக்கு மளமளவென்று காரியங்கள் நடந்து விடுகின்றன.

இத்தனை வருடங்களாக என்னுடைய மனதிற்கும் உடலுக்கும் உற்சாகம் தருகின்ற டானிக் போல, நான் பயன்படுத்துவது இசையைத் தான். பாட்டுத்தான். பக்தியின் அனுபவத்தை அதிகரிப்பது இசைதான். அதனால்தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும் இசையால் வணங்கினார்கள். ‘‘சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்; தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்;’’ என்றார் அப்பர் பெருமான். அதுவும் இந்த மார்கழி மாதம் இசைக்கென்றே ஒதுக்கப்பட்ட மாதம்.மார்கழியின் பனி விடியலில் – ஆங்காங்கே கோயில்களில் காற்றின் அலைகளோடு கலந்து வரும் தெய்வீக இசையாகிய திருப்பாவையை நம் செவிமடல் நுகராமல் இருந்திருக்க முடியாது. ஆண்டாள் அருளிய அருமையான பாசுரங்கள் இவை.

முத்துக்கள் முப்பது போல முப்பது பாசுரங்கள்! ஆண்டாள் இரண்டு மகத்தான காரியங்களைச் செய்தாள்! பூமாலையைச் சூடிக் கொடுத்தாள். பாமாலையைப் பாடிக் கொடுத்தாள்! ஆண்டாள் பூமாலையாலும், பாமாலையாலும் கட்டி பகவானையே ஆண்டாள்! ஆண்டாளின் அற்புதமான திருப்பாவையைப் போற்றும் ஒரு தனிப்பாடல் உண்டு. அதில் ஆண்டாளின் பக்தியை விவரிக்கும் வரி ஒன்று உண்டு. ‘இன்னிசையால் பாடிக் கொடுத்தாள்’ என்பது அந்த வரி.பாடுதல் என்றாலே இசைபாடுதல் என்றுதான் பொருள். அப்புறமென்ன இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் என்று வருகிறது? இதனை விளங்கிக் கொள்ள ஒரு சின்ன கதை.ஒரு ராஜாவின் அவையிலே அருமையாகப் பாடக்கூடிய ஒரு இசைவாணர் இருந்தார். அவர் பாடினால் அவையே மயங்கும். அவர் பாட்டு மீது அரசருக்கு அவ்வளவு விருப்பம். ஒரு முறை கேட்டார்.‘‘இசைவாணரே! மிகவும் அருமையாகப் பாடுகிறீர்கள். இவ்வளவு அற்புதமாக உங்களுக்கு இசை பயிற்றுவித்த உங்கள் குருநாதரின் இசையைக் கேட்டால் எப்படி இருக்கும்?’’ஆனந்தமாக இருக்கும்?

‘‘அவர் எங்கேயிருக்கிறார்? இங்கு வந்து பாட ஏற்பாடு செய்ய முடியுமா?
’’‘‘அவர் நம் ஊருக்கு வெளியே ஒரு எளிமையான குடிசையில் வாழ்ந்து வருகிறார். இங்கு அவரைப் பாட வைக்க முடியாது?
’’‘‘அப்படியானால் சரி. நாமே அங்கு சென்று அவரைப்பாட வைத்துக் கேட்போம்!’’
‘‘அதுவும் முடியாது. நம் விருப்பத்துக்கு அவர் பாட மாட்டார்.’’‘‘பின் அவர் பாட்டைக் கேட்க என்னதான் வழி?

’’‘‘ஒரு வழி உண்டு. நாம் சென்று அவருக்குத் தெரியாமல் அவர் குடிசைக்கு முன் காத்திருக்கலாம். அவர் பாடும்போது கேட்கலாம்’’ ராஜா ஏற்றுக் கொண்டார். முக்கியமான நான்கு பேரோடு சென்று அவர் அறியாமல் ஓரிடத்தில் மறைந்து கொண்டு காத்திருந்தார். ஒரு நாள் ஆயிற்று. இரண்டு நாள் ஆயிற்று. இனி பயனில்லை: புறப்படலாம் என்று நினைத்தபோதே, அந்தக் குடிசையிலிருந்து இதுவரைக் கேட்காத ஒரு சுந்தர்வகானம் காற்றில் தவழ்ந்து வந்து ராஜாவின் காதுகளை நிறைத்தது. ராஜா அப்படியே மயங்கிப்போனார். தன் அரசவை இசைவாணரிடம் கேட்டார்.‘‘இசைவாணரே! எப்படி இப்படிப் பாடுகிறார்? உங்கள் இசை அருமை என்று நினைத்திருந்தேன். உங்கள் குருநாதரின் இசையைக் கேட்டபிறகு நீங்கள் பாடுவது ஒன்றுமில்லை போல் தெரிகிறதே, என்ன காரணம்?’’

‘‘ஒரே காரணம்தான்!’’
‘‘அதுதான் என்ன?’’
‘‘நான் இசை பாடுகிறேன். அவர்
இன்னிசை பாடுகிறார்!’’

புரியவில்லை‘‘நான் உங்கள் அரசவைப் பாடகன். நீங்கள் தரும் பொன்னுக்கும், பரிசுக்கும், மற்றவர்கள் தரும் புகழுக்கும் நான் இசைபாடுகிறேன். அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல், பொன்னுக்கும் புகழுக்கும் மயங்காமல், ஆத்ம சமர்ப்பணமாக – தெய்வ சமர்ப்பணமாக இன்னிசை பாடுகிறார். நான் உங்களுக்காகப் பாடுகிறேன். அவர் கடவுளுக்காகப் பாடுகிறார். நான் பாடுவது இசை. அவர் பாடுவது இன்னிசை. இன்னுமொரு உதாரணம்; தியாகய்யர், ராமர் படத்தின் முன் ஒரு சிறிய பாத்திரத்தில் அளவோடு சூடாக்கி கற்கண்டு, ஏலக்காய் சேர்த்த பாலை வைத்து தோடி ராகத்தில் “ஆரகிம்பவே பாலாரகிம்பவே’’ என்று உள்ளம் குழைந்து பாடுகிறார். (ராமா பால்
ஆறுகிறது. ஏற்றுக்கொள்).அப்போது அவர் மனைவி வருகிறார்.‘‘சுவாமி! உங்களைத் தேடி தஞ்சாவூர் ராஜாவிடமிருந்து சிப்பந்திகள் வந்திருக்கிறார்கள்’’ தியாகய்யர் கூடத்துக்கு வருகிறார். வந்திருந்த அரண்மனை ஊழியர்கள் ஒரு பெரிய தாம்பாளத்தில் தங்க ஆபரணங்கள், பட்டு வேட்டி, சேலை என வைக்கிறார்கள்.எதற்கு இதெல்லாம்?‘‘ராஜாவின் பரிசு. சன்மானம். நீங்கள் அரசவைக்கு வந்து பாட வேண்டும்.! இசை பாட வேண்டும்!’’ ஒரு கணம் தியாகய்யர் பார்க்கிறார். அடுத்த கணம் ராமர் படத்துக்கு முன் வந்து நிற்கிறார். கம்பீரமாக கல்யாணி ராகம் சுநாதமாக வந்துவிழுகிறது.‘‘நிதி சால சுகமா? நின் சந்நதி சேவக சுகமா?’’ (ராமா! அரசன் கொடுத்தனுப்பிய சன்மானத்தைப் பெற்றுக்கொண்டு அரசவைக்குச் சென்று இசை பாடுவது சுகமா? அல்லது உன் இனிய சந்நதியில் மனமுருக இன்னிசை பாடுவது சுகமா?) தியாகய்யர் இன்னிசை பாடினார். இசையால் உலகியல் சுகங்கள் வரும். இன்னிசையால் உலகமே சுகம் பெறும். உங்கள் பாட்டை பகவத் அர்ப்பணமாகச் செய்யுங்கள். எல்லாம் கிடைக்கும்.

தேஜஸ்வி

The post இசையும் இன்னிசையும் appeared first on Dinakaran.

Read Entire Article