ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வை நாளை நடத்த உத்தரவு

4 weeks ago 7


சென்னை: கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகளை நாளை (டிச.21) நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி முதல் தமிழகத்தில், ஆழ்ந்த காற்றழுத்தம் காரணமாகவும், புயல் காரணமாகவும் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வந்தது. மழை பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்களும் பல இடங்களில் சேதம் அடைந்தது. அதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வேறு தேதியில் நடத்தவும் அறிவிக்கப்பட்டது. அதனால் அந்த மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவித்தனர். வட கிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ளதால், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகளை மீண்டும் நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அதன் பேரில் ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நாளை(21ம் தேதி) நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள அறிக்கை: கனமழையால் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.12-ம் தேதி பல மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவில்லை. அந்த நாளில் நடைபெறாத பாடத் தேர்வுகள் நாளை (டிச.21) நடத்த வேண்டும். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரியப்படுத்த வேண்டும்.

The post ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வை நாளை நடத்த உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article