துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட் கைப்பற்றிய வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார். நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு காரணமான வருண் சக்கரவர்த்தி, போட்டியில் ஆட தான் தேர்வாகியிருப்பது முந்தைய தினம் இரவு தான் தெரியும் என்று கூறினார். இது குறித்து அவர் கூறுகையில் ” ஒரு நாள் போட்டிகளை பொருத்த வரை இந்திய அணிக்காக நான் அதிகமாக விளையாடியது இல்லை. மேலும் சாம்பியன் டிராபியில் முதல் முதலாக பங்கேற்பதால் நேற்று மிகவும் பதட்டமாக இருந்தேன்.
ஆனால் போட்டி தொடங்கி செல்ல, செல்ல சற்று நிதானமடைந்தேன். நான் பதட்டமாக இருப்பதை பார்த்து ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா, மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அவ்வப்போது வந்து என்னுடன் பேசியது எனக்கு பெரிதும் உதவியது. அணி நிர்வாகத்திடம் இருந்து நேற்று முன்தினம் எனக்கு மெசேஜ் வந்தது. அப்போது தான் நியூசிலாந்துடனான போட்டியில் நான் அணியில் இடம் பிடித்திருக்கிறேன் என்பதே எனக்கு தெரியும். இந்த பிட்ச் முற்றிலும் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமானது இல்லை.
ஆனால், சரியான இடங்களில் பந்து வீசினால் நிச்சயம் அது நமக்கு கை கொடுக்கும் என்பதை நான் அறிந்தேன். அது எனக்கு பலனை கொடுத்தது. குறிப்பாக குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வெற்றியை வசப்படுத்தினர். இது ஒட்டு மொத்த அணியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.” என்றார் வருண் சக்கரவர்த்தி. நேற்றைய போட்டியில் வருண் சிறப்பாக பந்து வீசி இருப்பதால் அரையிறுதியில் ஆட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஒட்டு மொத்த அணியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி: வருண் சக்கரவர்த்தி பேட்டி appeared first on Dinakaran.