ஒட்டன்சத்திரம் அருகே 10ம் நூற்றாண்டு கால்நடை நீர் தொட்டி கண்டுபிடிப்பு

3 hours ago 1

திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் அருகே 10ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு, வசந்த மண்டபம், ஆடு மாடு நீர் அருந்தும் தொட்டியை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

திண்டுக்கல் வரலாற்று ஆய்வு குழு ஆய்வாளர் விஸ்வநாததாஸ், வரலாற்று மாணவர் ரத்தினமுரளிதர், வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர், உமா மகேஸ்வரன், பெருமாள்சாமி, ஆனந்த் ஆகியோர் கொண்ட குழுவினர் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பொருளூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 10ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு, வசந்த மண்டபம், ஆடு மாடு நீர் அருந்தும் தொட்டியை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இடைக்கால பாண்டிய மன்னர் கோச்சடையான் ரண தீரன் கொங்கு நாட்டை வென்றார். அவர் காலம் முதல் இடைக்கால பாண்டியர் ஆட்சி முடியும் வரை கொங்கு நாட்டில் சிவாலயங்கள் பல பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது.

ஒட்டன்சத்திரத்திற்கு வடமேற்கே பொருளூரில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில் சிதிலமடைந்து தற்போது நல்ல மங்கை கோயிலாக உள்ளது. பாண்டியர் கட்டுமான கோயில் சிதைவுற்றதால் அக்கோயில் வெளியே கற்களால் குதிரை பீடம் அமைத்துள்ளனர்.

தற்போது அப்பீடத்தில் இரு கற்களில் கல்வெட்டுகள் உள்ளது. அதில் உள்ள 10ம் நூற்றாண்டு சோழர்கால எழுத்திலும் இது சிவன் ஆலயமாகவே இருந்திருக்கும் என்பதை உணர்த்துகிறது. இக்கோயிலிருந்து 3 கிமீ தொலைவில் அமரபூண்டி செல்லும் சாலையில் குறுக்கு சாலையில் மிகச்சிறந்த பாண்டியர் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக நான்கு கால் வசந்த மண்டபம் உள்ளது.

வெளிபிரகாரமாக எட்டு கல் தூண்கள் வசந்த மண்டபத்தை சுற்றி இணைக்கின்றன. 250 ஆண்டுகளுக்கு முன் வரை வசந்த மண்டபம் நல்ல நிலையில் இருந்துள்ளது. பின் போர்களாலும், கவனிப்பாரின்றியும் சிதிலமடைந்து இருந்திருக்கிறது.

அக்காலத்தில் சிவராத்திரி, திருவாதிரை உற்சவங்களில் இறைவன் இவ்வசந்த மண்டபத்தில் எழுந்தருளி உள்ளார்.இம்மண்டபத்திற்கு மேற்கு புறம் கல் தூண்கள் நான்கும் அதன் மேல் குறுக்குவரி கல் சட்டங்களும் சதுரமாக கல் தூண்கள் உள்ளது. இது பறவைகள் அமர்ந்து உண்பதற்காக கட்டப்பட்டு உள்ளது. அதிலிருந்து சிறிது தொலைவில் 14 அடி நீளம், இரண்டரை அடி அகலம், மூன்றரை அடி உயரம் உள்ள பெரிய கல் தொட்டி உள்ளது. அத்தொட்டியிடன் இருபுறமும் ஒருவரி கொண்ட கல்வெட்டு உள்ளது.

ஸ்ரீ முக வருடம் ஆவணி மாதம் ஆறாம் நாள் (இதற்கு ஆங்கில ஆண்டு 1813) சிம்ம நாயக்கர் பண்ணை என்பவர் பறவைகள் அமர்ந்து தானியம் உண்ணும் கல்வரிசையும் ஆடு மாடு தண்ணீர் அருந்தும் கல் தொட்டியும் செய்து கொடுத்துள்ளார். ஆடு மாடு பறவைகள் என வாயற்ற ஜீவன்கள் நல்ல முறையில் உணவு நீர் அருந்த இதை தருமமாக செய்துள்ளார் சிம்மநாயக்கர். இவ்வாறு தெரிவித்தனர்.

The post ஒட்டன்சத்திரம் அருகே 10ம் நூற்றாண்டு கால்நடை நீர் தொட்டி கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article