புவனேஷ்வர்: டானா புயலால் ஒடிசாவில் 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான டானா புயல் நேற்று முன்தினம் அதிகாலை ஒடிசா – மேற்குவங்கத்துக்கு இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 110கிமீ வேகத்தில் வீசிய காற்றால் ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சாலைப்போக்குவரத்தும், மின் சப்ளையும் பாதிக்கப்பட்டது.
டானா புயலால் மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் டானா புயல் பாதிப்பு குறித்து ஒடிசா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சுரேஷ் புஜாரி செய்தியாளர்களிடம், “டானா புயலால் 18 மாவட்டங்களின் 108 தொகுதிகளில் உள்ள 1,671 கிராமங்களை சேர்ந்த 35.95 லட்சம் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கேந்திரபாரா, பாலசோர், பத்ரக் உள்பட பல்வேறு மாவட்டடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சலந்தி ஆற்றில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக பத்ரக் மாவட்டம் தல கோபபிந்தா கிராமம் வௌ்ளத்தால் சூழ்ந்துள்ளது. இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் வௌ்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். மழை நீரில் சிக்கிய 8,10,896 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு 6,210 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சூறாவளி, வௌ்ளம் காரணமாக சுமார் 5,480 வீடுகள் சேதமடைந்துள்ளன. உயிரிழப்பு ஏதுமில்லை” என்று இவ்வாறு கூறினார்.
The post ஒடிசாவில் டானா புயலால் 36 லட்சம் பேர் பாதிப்பு: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.