
புவனேஸ்வர்,
ஒடிசாவிற்கும், சத்தீஸ்கருக்கும் செல்ல நக்சல்கள் அடர்ந்த காடுகளைக் கொண்ட ஒரு நடைபாதையைப் பயன்படுத்துவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ஒடிசாவின் பாலங்கிர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சல்களை தேடி பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதனிடையே அங்கிருந்த முகாம்களில் பதுங்கி இருந்த நக்சல்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனையடுத்து நக்சல்கள் பதுங்கி இருந்த 2 முகாம்களில் உள்ள ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் பிற பொருட்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இரண்டு முகாம்களையும் பாதுகாப்பு படையினர் அழித்தனர். மேலும் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.