
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கே.ஐ.ஐ.டி. கல்லூரியில் படித்து வரும் 5 மாணவ, மாணவிகள் மீது அடையாளம் தெரியாத 3 நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கல்லூரி நுழைவாயில் அருகே இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் இன்போசிட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், அடையாளம் தெரியாத 3 பேர் தங்களை தாக்கி ஆடையை கிழித்ததாகவும், அந்தரங்க உறுப்புகளில் காயம் ஏற்படுத்தும் வகையில் பாலியல் ரீதியாக தாக்கி மானபங்கப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் நடந்தபோது அருகில் கல்லூரியின் காவல் பணியாளர்கள் மற்றும் ஒரு காவல்துறை வாகனம் இருந்ததாகவும், இருப்பினும் யாரும் தங்கள் உதவிக்கு வரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளார். அதே சமயம், காவல் பணியாளர் ஒருவர், "நீங்கள் குட்டையான உடைகளை அணிந்து திரிவதால்தான் இதுபோல் நடக்கிறது" என்று கூறியதாகவும் அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.
மாணவ, மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் ஒடியா மொழி பேசியதாகவும், மிகவும் கொச்சையான அவதூறு வார்த்தைகளை கூறி திட்டியதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கல்லூரிக்கு அருகில் உள்ள உணவகம் முன்பு இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய நபர்கள் மாணவி ஒருவரின் ஆடையை கிழித்துள்ளனர். அப்போது அவர்கள், "பெண்களை பற்றி அதிகமாக பேசுகிறீர்கள், ஒரு பெண்ணுக்காக போராடுகிறீர்கள். இப்போது உன்னை காப்பாற்ற எத்தனை பெண்கள் வருகிறார்கள் என்று பார்ப்போம்" என்று கூறியதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். முன்னதாக இதே கல்லூரியில் கடந்த பிப்ரவரி மாதம் நேபாளத்தை சேர்ந்த பிரகிருதி லம்சால் என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
அந்த மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது தாக்குதலுக்கு ஆளான மாணவிகள், இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்பதால், அவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையில், இந்த தாக்குதல் நடந்த அதே தினத்தில், இதே கல்லூரியில் பயின்று வரும் மற்றொரு நேபாள மாணவி பிரிஷா என்பவரும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் ஒடிசாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.