ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியாக உயர்வு

3 months ago 17


மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரியில் இன்று காலை நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் 16,196 கனஅடியாக அதிகரித்து நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்துள்ளது. தமிழக-கர்நாடக எல்லையில் காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக அருவிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது. தொடர்ந்து அந்த பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று 15,531 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 16,196 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 90.87 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 92 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 2.02 அடி உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 54.96 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

The post ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article