ஐமேக்ஸில் புதிய பரிசோதனை - ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்

6 months ago 19

வாஷிங்டன்,

பிரபல ஹாலிவுட் இயக்குனர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'ஓப்பன் ஹெய்மர்'. ஓப்பன் ஹெய்மர் கதாபாத்திரத்தில் சிலியன் மர்பி நடித்த இப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. இதனையடுத்து, கிறிஸ்டோபர் நோலன் தனது 13-வது படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் அதிகளவில் ஐமேக்ஸ் கேமராவையே பயன்படுத்த விரும்புவார். பெரும்பான்மையாக ஐமேக்ஸ் கேமராவை ஆக்சன் திரைப்படங்களுக்குத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், கிறிஸ்டோபர் நோலன் தன்னுடைய `ஓப்பன்ஹைமர்' திரைப்படத்திற்கு இந்த ஐமேக்ஸ் கேமாராவை பயன்படுத்தினார். அதுவும் ஐமேக்ஸ் பிலிம் கேமராமாவைப் பயன்படுத்தினார். ஓப்பன்ஹைமரின் வாழ்க்கையை இந்த டெக்னாலஜியின் வழியே அவர் சொல்ல விரும்பினார். அதிக உரையாடல் இருக்கக்கூடிய படத்தை ஐமேக்ஸ் கேமரா மூலம் படம்பிடிப்பதற்கு பல சவால்கள் இருக்கும். அதையெல்லாம் தாண்டி கடினங்களை மேற்கொண்டு சாத்தியப்படுத்திக் காட்டினார் நோலன்.

ஐமேக்ஸ் கேமரா கொஞ்சம் விலையுயர்ந்தது. அதுமட்டுமல்ல ஐமேக்ஸ் கேமராவை பயன்படுத்துவது கொஞ்சம் கடினமான ஒன்றுதான். இந்த விஷயங்களை சிந்தித்து பல ஹாலிவுட் இயக்குநர்களும் இந்த ஐமேக்ஸ் கேமராவின் பக்கம் நகரமாட்டார்கள். நோலன் பயன்படுத்தியதுபோல ஐமேக்ஸ் டெக்னாலஜியை வேறு எந்த ஹாலிவுட் இயக்குநர்களும் பயன்படுத்தியதில்லை என்பதை சுட்டிக்காட்ட பல சான்றுகளும், தரவுகளும் இருக்கின்றன.

2008-ல் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான `தி டார்க் நைட்' திரைப்படத்தை ஐமேக்ஸ் கேமராவை பயன்படுத்தி எடுத்தார். ஐமேக்ஸ் பிலிம் கேமாரவை ஒளிப்பதிவிற்கான மெயின் கேமராவாக பயன்படுத்தப்பட்ட முதல் திரைப்படம் இதுதான். அதன் பிறகு `இன்டர்ஸ்டெல்லார்' திரைப்படத்தில் மாற்றியமைக்கப்பட்ட ஐமேக்ஸ் லென்ஸ்களைப் பயன்படுத்தினார். கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர்கள் டாம் ஹோலான்ட் மற்றும் மேட் டெமான் நடிக்கவிருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது.

தற்போது அத்திரைப்படம் தொடர்பாக ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார் நோலன். ஐமேக்ஸ் டெக்னாலஜியை வைத்து திரைப்படத்திற்காக புதிய பரிசோதனை மேற்கொண்டு வருகிறாராம். அதை வைத்தே தன்னுடைய அடுத்த திரைப்படத்தை எடுக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார்.

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் 13-வது படம் 2026-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி ஐமேக்ஸ் பார்மெட்டில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article