
மும்பை,
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
தொடர்ந்து கொல்கத்தாவின் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் சுனில் நரைன் களம் இறங்கினர். இதில் சுனில் நரைன் ரன் எடுக்காமலும், டி காக் 1 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய கொல்கத்தா வீரர்கள் மும்பையின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதில் ரஹானே 11 ரன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி 26 ரன், வெங்கடேஷ் ஐயர் 3 ரன், ரிங்கு சிங் 17 ரன், இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய மனிஷ் பாண்டே 19 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதனால் கொல்கத்தா அணி 80 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து ஆண்ட்ரே ரசல் மற்றும் ரமன்தீப் சிங் ஜோடி சேர்ந்தனர். இதில் ரசல் 5 ரன்னிலும், அடுத்து வந்த ஹர்ஷித் ராணா 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 116 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன் எடுத்தார். மும்பை தரப்பில் அஸ்வனி குமார் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 117 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை விளையாடியது.
அந்த அணி, 12.5 ஓவர்களில் இலக்கை கடந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரிக்கெல்டன் அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், மும்பை அணி நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.