ஐந்துக்குப் பதிலாக ஐந்து..!

14 hours ago 2

தொன்றுதொட்டே வணிகத்திலும் வியாபாரத்திலும் நடைபெற்றுவரும் ஒரு மோசடிதான் எடைக் குறைப்பு. வாங்குவதற்கு ஓர் அளவு, விற்பதற்கு ஓர் அளவு…! வாங்கும்போது அதிகமாக எடைபோட்டு வாங்குவதும், பிறருக்குக் கொடுக்கும்போது எடையைக் குறைத்துப் போடுவதும் இன்றும்கூட நம் கண் எதிரில் காணும் தீமைதான். ரேஷன் கடைகளில் பொருள் வாங்குபவர்களுக்கு இந்த உண்மை தெரிந்திருக்கும். இரண்டு கிலோ சர்க்கரை என்று அளந்து போடுவார்கள். வீட்டிற்கு வந்து எடைபோட்டால் ஒன்றரை கிலோகூட இருக்காது.

ரேஷன் கடைகளில் மட்டுமல்ல, பொதுவாகவே எடைகுறைப்பு என்பது வியாபாரத்தில் பெரும் சாமர்த்தியம் என்றே பார்க்கப்படுகிறது. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் அளவை நிறுவையில் மோசடி செய்வதை மிகப் பெரிய பாவம் என்கிறது. இந்தத் தீமை பெருகிய காரணமாக ஒரு சமுதாயமே அழிந்துபோனது என்று வான்மறை கூறுகிறது. வணிகத்தில், பொருளை எடைபோடுவதில், அளவை நிறுவைகளில் மோசடி செய்யாமல், நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே அருளப்பட்ட திருமறை அத்தியாயம்தான் “அல்முதஃப்ஃபிஃபீன்”.இதன் பொருள் “அளவைகளில் மோசடி செய்வோர்.”

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனா நகரம் வந்தபோது அந்த நகரத்து வியாபாரிகளும் அளவை நிறுவைகளில் தவறுகள் செய்துகொண்டிருந்தனர். அந்த மக்களிடம் சென்ற நபிகளார், இந்த அத்தியாயத்தை ஓதிக்காட்டி, “ஐந்துக்குப் பதிலாக ஐந்து வழங்கப்படும்” என்றார்.“இறைத்தூதர் அவர்களே, ஐந்துக்குப் பதிலாக ஐந்து என்றால் என்ன?” என்று மக்கள் கேட்டனர்.நபி (ஸஸ்) அவர்கள் கூறினார்கள்:“ஒரு கூட்டத்தினர், தாம் செய்துகொண்ட ஒப்பந்தங்களுக்குப் பங்கம் விளைவித்தனர் எனில் அவர்களின் மீது அவர்களின் எதிரிகளை இறைவன் சாட்டிவிடுவான்.“இறைவன் இறக்கியருளிய சட்டநெறிகள் அல்லாத வேறு சட்டங்களைக் கொண்டு அவர்கள் தீர்ப்பு வழங்கினால் அவர்களிடையே வறுமை பரவாமல் இருக்காது.“மானக்கேடான செயல்கள் அவர்களிடையே தலைதூக்கினால் அவர்களிடையே மரணம் பரவலாகியே தீரும்.

“அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்தார்கள் எனில், வேளாண்பயிர்கள் அவர்களைவிட்டுத் தடுக்கப்பட்டே தீரும். மேலும் பஞ்சத்தால் பீடிக்கப்படுவார்கள்.“ஜகாத் எனும் தர்மத்தை வழங்காமல் தடுத்துக்கொண்டார்கள் எனில் மழையை விட்டும் அவர்கள் தடுக்கப்பட்டே தீருவர்.” (ஆதாரம்: இப்னு கஸீர், பத்தாம் பாகம்)இந்த நபிமொழியை இப்படியும் விளங்கிக்கொள்ளலாம்:எதிரிகள் தாக்கக் கூடாது எனில் ஒப்பந்தங்களைப் பேணி நடந்து கொள்ளுங்கள்.வறுமை பரவக் கூடாது எனில் இறைச் சட்டங்களுக்கு ஏற்ப தீர்ப்பு வழங்குங்கள். மரணம் பரவலாகக் கூடாது எனில் மானக்கேடான செயல்க ளிலிருந்து விலகியிருங்கள்.விளைச்சலில் பாதிப்பும் பஞ்சமும் வரக்கூடாது எனில் அளவை நிறுவைகளில் நீதியைக் கடைப் பிடியுங்கள்.மழை எனும் அருள் வேண்டும் எனில் ஜகாத்தை முறையாகக் கணக்கிட்டுக் கொடுத்துவிடுங்கள்.இந்த ஐந்தையும் கவனத்தில் கொண்டு இறைவனுக்கு அஞ்சி நேர்மையாக வாழ்வோம்.
– சிராஜுல் ஹஸன்.

The post ஐந்துக்குப் பதிலாக ஐந்து..! appeared first on Dinakaran.

Read Entire Article