ஐதராபாத்தில் சோகம்: இறந்தது தெரியாமல் 4 நாட்களாக மகனின் உடலுடன் வாழ்ந்த பார்வையற்ற பெற்றோர்

2 months ago 11

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள பார்வையற்றவர்களுக்கான காலனியில் 60 வயதுடைய கணவன், மனைவி தங்களுடைய 30 வயது இளைய மகனுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், அவர்களுடைய வீட்டில் இருந்து சில நாட்களாக துர்நாற்றம் வீசியது. இதனால், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் போலீசிடம் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, நகோல் காவல் நிலைய போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று நேற்று சோதனையிட்டனர். அப்போது, அந்த வீட்டில் அந்த தம்பதியின் மகன் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. 4 நாட்களுக்கு முன் தூக்கத்தில் இருந்தபோது அவர் உயிரிழந்து உள்ளார் என தெரிகிறது. அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி உயரதிகாரி சூர்யா நாயக் கூறும்போது, மகன் உயிரிழந்தது பற்றி, பார்வையற்ற தம்பதிக்கு எதுவும் தெரிய வரவில்லை. அவர்கள், மகனிடம் உணவும், தண்ணீரும் கேட்டபடி இருந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு எந்தவித பதிலும் வரவில்லை.

இதனால் வயது முதிர்ந்த அந்த தம்பதி உணவின்றி 4 நாட்களாக பரிதவித்து வந்துள்ளனர். அதனுடன், அவர்களால் சரியாக பேச முடியவில்லை. அவர்கள் குரலும் மெல்லிய அளவில் இருந்துள்ளது. இதனால், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களால் அவர்களின் குரலை கேட்க முடியாமல் போயுள்ளது.

அந்த வயது முதிர்ந்த, பார்வையற்ற தம்பதி அரை மயக்கத்தில் இருந்துள்ளது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு உணவும், தண்ணீரும் கொடுக்கப்பட்டு உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இந்த தம்பதியின் மூத்த மகன் நகரின் மற்றொரு பக்கத்தில் வசித்து வருகிறார். அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Read Entire Article