
ஐதராபாத்,
ஐ.பி.எல். தொடரில் நேற்று இரவு ஐதராபாத்தில் நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் அடித்தார். ஐதராபாத் அணி தரப்பில் ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து 246 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 141 ரன்கள் அடித்து அசத்தினார்.
இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி பேட்டிங் செய்தபோது 9-வது ஓவரை பஞ்சாப் அணியின் ஆல்ரவுண்டரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேக்ஸ்வெல் வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட சக நாட்டவரான டிராவிஸ் ஹெட் 3-வது மற்றும் 4-வது பந்தை தொடர்ச்சியாக சிக்சருக்கு பறக்க விட்டார்.
5-வது பந்தை நேராக மேக்ஸ்வெல்லை நோக்கி அடித்தார். அந்த பந்தை எடுத்த மேக்ஸ்வெல் ஹெட்டை நோக்கி வீசினார். இதனால் கடுப்பான ஹெட், மேக்ஸ்வெல்லை நோக்கி ஏதோ கூறினார். அதற்கு மேக்ஸ்வெல்லும் ஏதோ கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மேக்ஸ்வெல் மற்றொரு டாட் பந்தை வீசி அந்த ஓவரை முடித்தார். இருப்பினும் ஹெட் மீண்டும் மேக்ஸ்வெலிடம் ஏதோ சொன்னார். இருப்பினும் மேக்ஸ்வெல் அதனை கண்டுகொள்ளவில்லை.
ஆனால் பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஹெட்டை நோக்கி நடந்து வந்து ஏதோ கூறினார். இதனால் இருவருக்குமிடையே மோதல் ஏற்படுவதுபோல் தெரிந்தது. உடனடியாக நடுவர் இருவரையும் சமாதனப்படுத்தினார்.
ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுக்குள் மோதிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.