கோவை: கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர், சரவணம்பட்டி பகுதியில் அறை எடுத்து தங்கி ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 14ம்தேதி இரவு அவர் அருகே உள்ள கடைக்கு சென்று சமையலுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து ஸ்கூட்டியில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சல் போடவே அந்த வாலிபர் பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து இளம்பெண் சரவணம்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.
இதேபோல், கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பெண் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை பள்ளி சென்றிருந்த தனது குழந்தையை அழைத்து வர நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை கீழே தள்ளி பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றார். இதனால், அதிர்ச்சியில் பெண் சத்தம் போட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே அனைவரையும் அந்த வாலிபர் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து அந்த பெண் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
இதில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தேவநல்லூர் பெருமாள்குளத்தை சேர்ந்த சோபின்ஸ் (19) என்பதும், இவர், வடவள்ளி திருவள்ளுவர் நகரில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சோபின்ஸ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சரவணம்பட்டியில் ஐடி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், ஒரே நபரா? என்பது குறித்தும் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
The post ஐடி ஊழியர் உட்பட 2 பெண்களுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது appeared first on Dinakaran.