லார்ட்ஸ்: ஐசிசி 3வது டெஸ்ட்சாம்பியன்ஷிப் பைனல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-தென்ஆப்ரிக்கா மோதுகின்றன. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித் 66, பியூ வெப்ஸ்டர் 72, அலெக்ஸ் கேரி 23, லாபுசாக்னே 17ரன் அடித்தனர். 56.4 ஓவரில் ஆஸ்திரேலியா 212ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. தென்ஆப்ரிக்க பவுலிங்கில் ரபாடா 5, மார்கோ ஜான்சன் 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்ரிக்க அணியில் மார்க்ரம் டக்அவுட் ஆக, ரியான் ரிக்கல்டன் 16 ரன்னில் ஸ்டார்க் பந்தில் வெளியேறினார். வியான் முல்டர் 6 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுக்க டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் நடையை கட்டினார். நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில் தென்ஆப்ரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 43ரன் எடுத்திருந்தது. இன்று 2வது நாள் ஆட்டம் நடந்து வருகிறது. 169 ரன் பின்தங்கிய நிலையில் கேப்டன் பவுமா(3ரன்), டேவிட் பெடிங்ஹாம்(8ரன்)பேட்டிங்கை தொடர்ந்தனர்.
நேற்று ஒரே நாளில் 14 விக்கெட்டுகள் சரிந்துள்ளன. 66ரன் அடித்த ஸ்மித் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட்டில் அதிக ரன் அடித்த வெளிநாட்டு வீரர் (591ரன்)என்ற சிறப்பை பெற்றார். இதற்கு முன் ஆஸி. வீரர் வாரன் பாட்ஸ்லி 575ரன் எடுத்திருந்தார். 2வது இன்னிங்ஸ்சில் ஸ்மித் 9ரன் அடித்தால் 600 ரன்னை அடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைக்கலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 பிளஸ் விக்கெட் எடுத்தவர்களில் சிறந்த பந்துவீச்சு ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளவர்களில் ரபாடா (39.10) முதலிடத்தில் உள்ளார். பும்ரா( 42.00)அடுத்த இடத்தில் உள்ளார்.
The post ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல்; முதல் நாளில் 14 விக்கெட் காலி: தெ.ஆப்ரிக்காவுக்கு ஆஸி. பதிலடி appeared first on Dinakaran.