
டெல்லி,
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக செயல்பட்டு வந்தவர் ய்ஷ்வந்த் வர்மா. இவர் டெல்லியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இதனிடையே, கடந்த வாரம் ஹோலி பண்டிகையின்போது யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. யஷ்வந்த் வர்மா வெளியூர் சென்ற நிலையில் அவரது குடும்பத்தினர் தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைந்தனர். அப்போது, நீதிபதியின் வீட்டில் உள்ள பல்வேறு அறைகளில் கட்டு கட்டாக பணம் மற்றும் நகைகள் இருப்பதை கண்டு தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், வீட்டில் இருந்த கணக்கில் வராத நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம், நகை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலீஜியம் ஆலோசனை நடத்தியது.இந்த ஆலோசனையின் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை உத்தரபிரதேசத்தின் அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் முடிவு செய்தது.
கொலீஜியம் இப்பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. ஆனாலும், முறைகேடுகளுக்கு ஆளாகியுள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி விலக செய்ய வேண்டும் என்று கோலிஜியத்தில் உள்ள சில நீதிபதிகள் தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளை, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நீதிபதி யஷ்வந்த் வர்மா இந்த சம்பவத்திற்குபின் பணிக்கு வரவில்லை. அவர் விடுப்பில் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.