ஐகோர்ட் தீர்ப்பால் பழனிசாமிக்கு நெருக்கடி : தனது ஆதரவாளர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

3 months ago 6

ஈரோடு : ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், செங்கோட்டையன் தமது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்திருந்தார் செங்கோட்டையன். எடப்பாடிக்கான பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் புறக்கணிப்பால் பங்கேற்கவில்லை என செங்கோட்டையன் கூறியிருந்தார். பாராட்டு விழா அழைப்பிதழில் வேலுமணி பெயருக்கு பிறகு செங்கோட்டையன் பெயர் போடப்பட்டதால் அவர் அதிருப்தி என தகவல் வெளியாகியது. மேலும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் செங்கோட்டையனுக்கு தெரியாமல் சிலருக்கு பொறுப்பு வழங்கப்பட்டதால் அதிருப்தி எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அதிமுக நிகழ்ச்சிகளை புறக்கணித்த செங்கோட்டையன், ஆதரவாளர்களுடன் தனியே ஆலோசனை நடத்தி வருகிறார். செங்கோட்டையன் புறக்கணிப்பு தொடர்பாக பழனிசாமி இதுவரை விளக்கம் அளிக்காத நிலையில் ஆலோசனையால் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ள நிலையில் செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே கோபிச் செட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீடு முன்பு ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.

The post ஐகோர்ட் தீர்ப்பால் பழனிசாமிக்கு நெருக்கடி : தனது ஆதரவாளர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை appeared first on Dinakaran.

Read Entire Article