ஐகோர்ட் கிளை குட்டியதை மறந்து நாடாளுமன்றத்தில் இந்தியில் அமைச்சர்கள் பதில் அளிப்பதா? எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்

2 months ago 10

மதுரை: அலுவல் மொழி விதிகளை மீறக்கூடாது என, ஐகோர்ட் மதுரை கிளை கண்டித்ததை மறந்து, நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் இந்தியில் பேசி வருவது கண்டிக்கத்தக்கது என எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஆங்கிலம் நன்கு அறிந்த அமைச்சர்கள் கூட நாடாளுமன்றத்தில் இந்தியில் பதில் சொல்வதும், பேசுவதும், இந்தி பேசாத மாநிலங்களின் எம்பிக்களுக்கு இந்தியில் கடிதங்கள் எழுதுவதும் அதிகரித்துள்ளது. இது, அறியாமல் நடைபெறும் தவறு அல்ல. அறிந்தே இந்தி திணிப்பை செய்கிறார்கள்.

தென்மாநில எம்பிக்கள் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் கவலை இல்லை என்றே கருதுகிறார்கள். ஏற்கனவே, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் எனக்கு, இந்தியில் எழுதிய கடிதம் தொடர்பாக நான் ஐகோர்ட் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் அலுவலகத்திலிருந்து தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டது என்று ஒன்றிய அமைச்சர் பதில் அளித்தார். அமைச்சரின் பதிலை ஏற்றுக்கொண்டு, இனி அலுவல் மொழி விதிகளை மீறக் கூடாது என்று ஒன்றிய அரசின் தலையில் ஐகோர்ட் கிளை குட்டியது மறந்து போனதா இல்லை மறத்துப் போனதா? இவ்வாறு கூறியுள்ளார்.

The post ஐகோர்ட் கிளை குட்டியதை மறந்து நாடாளுமன்றத்தில் இந்தியில் அமைச்சர்கள் பதில் அளிப்பதா? எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article