* 7.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள காசோலைகள், 195 அடையாள அட்டைகள் பறிமுதல்
சென்னை: ஐஐடி மற்றும் ஜேஇஇ பயிற்சி அளிப்பதாக மாணவர்களிடம் பல லட்சம் ரூபாய் வசூலித்து பயிற்சி அளிக்காமல் ஏமாற்றிய ‘பிட்ஜி’ தனியார் பயிற்சி மையத்திற்கு சொந்தமான 4 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை போலீஸ் கமிஷனர் அருணிடம் கீழ்ப்பாக்கம் மற்றும் கே.கே.நகரில் இயங்கி வரும் ‘பிட்ஜி’ என்ற தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 191 மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் புகார் ஒன்று அளித்தனர்.
அந்த புகாரில், ஐஐடி மற்றும் ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சிக்காக 191 மாணவர்கள் சேர்ந்தோம். பயிற்சி மையத்தின் தமிழ்நாடு மண்டல தலைவர் அங்கூர் ஜெயின் பயிற்சி காலத்திற்கு முன்பாக மாத தவணை என்ற பெயரில் பயிற்சிக்காக கட்டணத்தை வசூலித்தார். ஆனால் சொன்னபடி எங்களுக்கு பயிற்சி அளிக்கவில்லை. திடீரென பயிற்சியை நிறுத்திவிட்டனர். இதனால் நாங்கள் கட்டிய பல லட்சம் ரூபாய் பணத்தை கேட்டதற்கு அவர் முறையாக பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
இதனால் எங்களது எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பயிற்சி அளிப்பதாக கூறி பல கோடி ரூபாய் பணம் முன்பாக வசூலித்து மோசடி செய்த பயிற்சி நிறுவனத்தின் மண்டல தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர். அந்த புகாரின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் சீதாஞ்சலி கண்காணிப்பில் மோசடி புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர் காயத்ரி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 9ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை கீழ்ப்பாக்கம் மற்றும் கே.கே.நகரில் இயங்கி வரும் ‘பிட்ஜி’ என்ற தனியார் பயிற்சி மையம் மற்றும் பயிற்சி மையத்தின் தமிழ்நாடு மண்டல தலைவர் அங்கூர் ஜெயின் வீடுகள் என 4 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள 22 வங்கி காசோலைகள், சிசிடிவி, டிவிஆர், தனியார் பயிற்சி மையத்தின் முத்திரை, கட்டணம் திரும்ப தரக்கோரி மாணர்களின் பெற்றோர்கள் அனுப்பிய 125 கடிதங்கள் மற்றும் புகார்கள் தொடர்பாக 100 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பயிற்சி என்ற பெயரில் மாணவர்களிடம் முன் பணம் பெற்று பயிற்சி அளிப்பது போல் நடித்து பணம் பறித்து வந்ததும் விசாரணையில் உறுதியாகியுள்ளது. இதையடுத்து பயிற்சி நிறுவனம் மற்றும் மோசடியில் ஈடுபட்ட அங்கூர் ஜெயின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
The post ஐஐடி, ஜேஇஇ பயிற்சி அளிப்பதாக மாணவர்களிடம் பல லட்சம் மோசடி சென்னையில் ‘பிட்ஜி’ பயிற்சி மையத்திற்கு சொந்தமான 4 இடங்களில் அதிரடி சோதனை appeared first on Dinakaran.