
கொல்கத்தா,
மேற்குவங்காள மாநிலம் உத்தர தினஜ்பூர் மாவட்டம் ராய்கஞ்ச் பகுதியை சேர்ந்த இளம்பெண் சம்பா தாஸ். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்குமுன் இன்ஸ்டாகிராம் மூலம் ஹரிடாய் தேவ் பிஸ்வாஸ் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தேவ் பிஸ்வாஸ் தன்னை ஐ.பி.எஸ். அதிகாரி என கூறி சம்பா தாசிடம் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து, இருவரும் ஆன்லைன் மூலம் காதலித்துள்ளனர்.
பின்னர், 2 மாதங்கள் கழித்து தேவ் பிஸ்வாசும், சம்பா தாசும் பதிவுத்திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி 3 மாதங்கள் கழித்து தேவ் பிஸ்வாஸ் ஐ.பி.எஸ். அதிகாரி இல்லை என்பதும் தன்னை திருமணம் செய்துகொண்டதும் சம்பாவுக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பிஸ்வாசிடம் அவர் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிஸ்வாஸ், சம்பாவை கடுமையாக தாக்கி கொடுமைபடுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரி என கூறி தன்னை ஏமாற்றி திருமணம் செய்த பிஸ்வாஸ் மீது சம்பா போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பிஸ்வாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.