
கேப்டவுன்,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 209 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் அடித்தார்.
பின்னர் 210 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சூர்யவன்ஷி சதம் விளாசினார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய 14 வயது வீரரான சூர்யவன்ஷி வெறும் 35 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதமடித்த வீரர், ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் சதமடித்த வீரர், அதிவேகமாக சதமடித்த இந்தியர் போன்ற ஏராளமான சாதனைகளை படைத்தார். இதனால் சூர்யவன்ஷி பல முன்னாள் ஜாம்பவான் வீரர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.
அந்த வரிசையில் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான ஷான் பொல்லாக், சூர்யவன்ஷி சதமடித்தது ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த செயல்பாடு என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "என்னைப் பொறுத்த வரை இது ஐ.பி.எல். தொடரில் வெளிப்படுத்தப்பட்ட சிறந்த தனிநபர் செயல்பாடாகும். ஏனெனில் 14 வயது நிரம்பிய பையன் களத்திற்கு வந்து அனைத்து திசைகளிலும் அடித்து வெறும் 35 பந்தில் சதம் அடித்துள்ளார். ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த வெற்றிகள் மற்றும் செயல்பாடுகள் இருந்துள்ளன. ஆனால் இதுதான் ஐ.பி.எல். வரலாற்றின் சிறந்த செயல்பாடாகும்
இந்தப் பையன் வந்து களத்தில் எதிரணிக்கு தண்டனை கொடுத்துள்ளார். எதிரணியில் இருந்த சில வீரர்கள் அவர் பிறப்பதற்கு முன்பாகவே 4 வருடங்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாடியுள்ளனர். ஆனால் அப்படிப்பட்ட அவர்களை இந்த பையன் அடித்து நொறுக்கினார்" என்று கூறினார்.