
புவனேஸ்வர்,
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் கலிங்கா தொழிலக தொழில்நுட்ப மையம் (கே.ஐ.ஐ.டி.) செயல்பட்டு வருகிறது. இதன் பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்த நேபாள நாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் நேற்று மாலை மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நேபாளத்தின் பீர்குஞ்ச் பகுதியை சேர்ந்த அவர், கணினி அறிவியல் படிப்பை படித்து வந்துள்ளார். எனினும், அவருடைய அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த தகவலை காவல் ஆணையாளர் தேவ் தத்தா சிங் உறுதி செய்துள்ளார். இதுபற்றி இந்தியாவில் உள்ள நேபாள தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த மாணவியின் பெற்றோர் இன்று புவனேஸ்வர் நகருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். 3 மாதங்களுக்கு முன், பி.டெக் மூன்றாம் ஆண்டு படிப்பை படித்து வந்த பிரகிரிதி லம்சால் என்ற நேபாள மாணவி விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை தற்கொலைக்கு தூண்டினார் என கே.ஐ.ஐ.டி. கல்வி மையத்தின் 21 வயது மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேர் மீதும் வழக்கு பதிவானது.
இந்நிலையில், மற்றொரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஏப்ரலில், மேற்கு வங்காளத்தின் பான்குரா பகுதியை சேர்ந்த அர்னாப் முகர்ஜி என்ற மாணவர் புவனேஸ்வரில் மன்சேஸ்வர் பகுதியில் கட்டப்பட்டு வந்த கட்டிடம் ஒன்றில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். பி.டெக் மூன்றாம் ஆண்டு படிப்பை படித்து வந்த அந்த மாணவர் கே.ஐ.ஐ.டி. பல்கலைக்கழக விடுதிகளில் ஒன்றில் தங்கி இருந்துள்ளார்.