
பெங்களூரு,
இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இன்னும் 13 லீக் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
பெங்களூரு அணியின் கேப்டனான ரஜத் படிதார் கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய ஐ.பி.எல். தொடரில் இருந்து விலக உள்ளதாகவும் அவருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இது பெங்களூரு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஐ.பி.எல். தொடர் தொடங்க உள்ள சூழலில் ரஜத் படிதார் பெங்களூரு அணியுடன் இணைந்துள்ளார். இதனை ஆர்சிபி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு அறிவித்துள்ளது.
இது அவர் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.