புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. 10 அணிகளும் மொத்தம் 46 வீரர்களை தக்க வைத்தன.
ஐ.பி.எல். வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.
இதில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான ரிஷப் பண்டை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையான ரூ.27 கோடிக்கு வாங்கியது.
இந்நிலையில் ரூ.18 கோடிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் ரிஷப் பண்ட்டை மீண்டும் தக்க வைக்க விரும்பியதாக அதன் பயிற்சியாளர் ஹேமங்க் பதானி தெரிவித்துள்ளார். ஆனால் அதிகமான சம்பளம் வேண்டும் என்பதற்காக ரிஷப் பண்ட் அதை ஏற்றுக் கொள்ளாமல் வெளியேறியதாக அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ரிஷப் பண்ட் டெல்லி அணியில் மீண்டும் தக்க வைக்கப்பட விரும்பவில்லை. அவர் தன்னுடைய மார்க்கெட் மதிப்பை சோதிப்பதற்காக ஏலத்திற்கு செல்ல விரும்பினார். பொதுவாக நீங்கள் ஒரு வீரரை தக்க வைக்க விரும்பினால் அணி நிர்வாகமும் அந்த வீரரும் அதற்கு ஒப்புக் கொள்வது அவசியம். அந்த வகையில் நாங்கள் அவரிடம் பேசினோம்.
மீண்டும் அவரை தக்க வைக்க நிறைய போன் கால் மற்றும் மெசேஜ் செய்தோம். ஆனால் தாம் ஏலத்திற்கு சென்று மார்க்கெட் மதிப்பை சோதிக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக முதன்மையாக தக்க வைக்கப்படும் அதிகபட்ச வீரருக்கு கிடைக்கும் ரூ.18 கோடியை விட தாம் அதிக விலைக்கு செல்வேன் என்று ரிஷப் பண்ட் சொன்னார்.
நாளின் இறுதியில் அவர் சொன்னது போலவே ரூ.27 கோடிகளை பெற்றார். அது அவருக்கு நல்லது. நல்ல வீரரான அவரை நாங்கள் மிஸ் செய்வோம். ஆனால் இப்படித்தான் வாழ்க்கைச் செல்லும்" என்று கூறினார்.