
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. லக்னோவில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆன மார்க்ரம் 6 ரன்களில் முதல் ஓவரின் கடைசி பந்தில் வீழ்ந்தார். இதனையடுத்து களமிறங்கிய அதிரடி வீரரான நிக்கோலஸ் பூரன் (8 ரன்கள்) இந்த முறை விரைவில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கை கோர்த்த தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் - கேப்டன் ரிஷப் பண்ட் கூட்டணி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி லக்னோ அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் பவர்பிளே முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் மட்டுமே அடித்தது.
பண்ட் - மார்ஷ் கூட்டணி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. மிட்செல் மார்ஷ் 30 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் போல்டானார். அடுத்து களமிறங்கிய ஆயுஷ் பதோனி தனது பங்குக்கு 22 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ரிஷப் பண்ட் நிலைத்து விளையாடினார். பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார். இறுதி கட்டத்தில் அவருடன் கை கோர்த்த அப்துல் சமத் சிறிது அதிரடி காட்ட (11 பந்துகளில் 20 ரன்கள்) லக்னோ நல்ல நிலையை எட்டியது. அரைசதம் கடந்த பண்ட் 63 ரன்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் அடித்துள்ளது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் பதிரனா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கியது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷேக் ரஷீத்-ரச்சின் ரவீந்திரா, நிதானமாக ஆடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆவேஷ் கான் வீசிய 5-வது ஓவரில் ஷேக் ரஷீத்(27 ரன்கள்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 9 ரன்களில் அவுட் ஆனார்.
5 பவுண்டரிகளுடன் 22 பந்துகளில் 37 ரன்கள் அடித்த ரச்சின் ரவீந்த்ரா, மார்க்ரம் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஜடேஜா 7 ரன்களில் அட்டமிழந்தார்.
விஜய் சங்கர் 9 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேற, 30 பந்துகளில் 56 ரன்கள் தேவை என்ற நிலையில், அடுத்த விக்கெட்டுக்கு தோனி களமிறங்கினார். சிவம் துபே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் தோனி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.
இதனால் இறுதி ஓவர்களில் ஆட்டம் சென்னை அணிக்கு சாதமாக திரும்பியது. ஆவேஷ் கான் வீசிய 20-வது ஓவரில் சிவம் துபே 4 ரன்கள் அடித்து ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்தார். இதையடுத்து 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்து சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
கேப்டன் தோனி 11 பந்துகளில் 26 ரன்கள்(4 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) மற்றும் சிவம் துபே(37 பந்துகள், 43 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். லக்னோ அணியில் ரவி பிஷ்னோய் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 2025 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை அணி 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.