
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய அணி மும்பையில் நேற்று அறிவிக்கப்பட்டது. அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.
இந்த மாத தொடக்கத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடி சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரரான அவருக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இளம் வீரரான இவர் இந்திய அணிக்கு எப்படி வெற்றியை தேடி கொடுக்க போகிறார்? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியில் கேப்டனாக இருந்தபோது சுப்மன் கில்லின் திறமையைப் பார்த்துள்ளதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் கூறியுள்ளார். எனவே கில் கேப்டனாக செயல்படத் தகுதியானவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய அணி இப்போதும் இது மிக மிக வலுவான அணியாகவே இருக்கிறது. கேப்டன்ஷிப் பொறுத்த வரை இது சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன். ஐ.பி.எல். தொடரில் சில வருடங்களுக்கு முன்பு நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுப்மன் கில்லுடன் 2 சீசன்கள் சேர்ந்து விளையாடியுள்ளேன். அங்கு அவர் இயற்கையாகவே தலைவராக இருப்பதை பார்த்துள்ளேன். அவர் ஒரு குழுவிற்குள் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். அணிக்குள் உள்ள வழிமுறைகளை கேள்வி கேட்பதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இறுதியில் கூட்டு முயற்சிதான் அவருக்கு மிக முக்கியமானது." என்று கூறினார்.